பண்டிட்டுகள் காஷ்மீரில் வாழ முடியாத சூழ்நிலையை உருவாக்கியது காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சிகளும்தான்.. பா.ஜ.க.

 
காங்கிரஸ்

காஷ்மீர் பண்டிட்டுகள் பள்ளத்தாக்கில் இனி வாழ முடியாத சூழ்நிலையை உருவாக்கியது காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சிகளும்தான் என பா.ஜ.க. குற்றம் சாட்டியது என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

1990ன் தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீரில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பண்டிட் சமூகத்தினர் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். பண்டிட் சமூகத்தினர் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, அனுபம் கெர், தர்ஷன் குமார் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படம் கடந்த 11ம் தேதியன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் போஸ்டர்

பண்டிட் வெளியேற்றத்துக்கு பா.ஜ.க.தான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கேரள காங்கிரஸ் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், 1989 டிசம்பரில் பா.ஜ.க.வின் ஆதரவால் வி.பி.சிங் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதற்கு அடுத்த மாதமான 1990 ஜனவரியில் பண்டிட்களின்  இடம்பெயர்வு தொடங்கியது. பா.ஜ.க. எதுவும் செய்யவில்லை. 1990 நவம்பர் வரை வி.பி. சிங்கிற்கு பா.ஜ.க. ஆதரவை தொடர்ந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஜம்முவில் பண்டிட்டுகளுக்காக 5,242 குடியிருப்புகளை கட்டியது. மாணவர் உதவித்தொகை, விவசாயிகளுக்கான உதவி மற்றும் ரூ.1,168.4 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் ஆகியவற்றுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முறை உதவியாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பா.ஜ.க.

காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. எம்.பி. கே.ஜே. அல்போன்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: காங்கிரஸின் வரலாறு திரிக்கப்பட்டது. காஷ்மீர் பண்டிட்டுகள் பள்ளத்தாக்கில் இனி வாழ முடியாத சூழ்நிலையை உருவாக்கியது காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சிகளும்தான். பண்டிட்டுகள் கொல்லப்பட்டனர், அவர்களின் உயிருக்கு உண்மையான பயம் இருந்தது, எனவே அவர்கள் வெளியேறினர். 1.5 லட்சத்துக்கும் அதிகமான காஷ்மீரி பண்டிட்கள் வகுப்புவாத அடிப்படையில் ஆளும் கட்சியால், காங்கிரஸ் அல்லது அதன் ஆதரவு அரசாங்கங்களால் வெளியேற்றப்பட்டனர் என்று தெரிவித்தார்.