தேஜஸ்வி மற்றும் அவரது குடும்பத்தினர் சிறையில் அடைக்கப்படுவார்கள்... பா.ஜ.க. எம்.பி. பதிலடி

 
தேஜஸ்வி யாதவ்

தேஜஸ்வி மற்றும் அவரது குடும்பத்தினர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று பா.ஜ.க. எம்.பி. ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

பீகார் சட்டப்பேரவையின் எதிர்கட்சி தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான நித்யானந்த் ராய் என்னை சந்தித்து ராஷ்டிரிய ஜனதா தளத்தில் சேர விருப்பம் தெரிவித்தார். தன்னை (ராய்) அமைச்சராவதற்கு முன்பு அவரை கட்சியில் சேர்க்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். அங்கு (பா.ஜ.க.) இருக்க விருப்பம் இல்லை என்று என்னிடம் தெரிவித்தார். தேஜஸ்வி யாதவின் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நித்யானந்த் ராய்

தேஜஸ்வி யாதவின் பேச்சுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க.வின் மக்களவை எம்.பி. ஜெய்ஸ்வால் கூறியதாவது: தேஜஸ்வி யாதவ் அவரை (நித்யானந்த் ராய்) வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது, என்னையும், எனது குடும்பத்தினரையும் சிறைக்கு செல்லாமல் பாதுகாக்க தயாராக இருந்தால் பீகாரில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்க தயார் நித்யானந்த் ராயிடம் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

சஞ்சய் ஜெய்ஸ்வால்

ஆனால் பா.ஜ.க. மறுத்து விட்டது. அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், தேஜஸ்வி மற்றும் அவரது குடும்பத்தினர் சிறையில் அடைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். தேஜஸ்வி யாதவின் தந்தை லாலு பிரசாசத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.