லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி - நீதிமன்றம்.... எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்... பா.ஜ.க. எம்.பி.

 
லாலு பிரசாத் யாதவ்

எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை  செய்வீர்கள் என்று டோர்தனா கருவூலத்திலிருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து குறித்து பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. தெரிவித்தார்.

லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநில முதல்வராக இருந்தபோது கால்நடை தீவனங்கள் வாங்கியதில்  ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராக மட்டும் 5 வழக்குகள் பதிவாகின. கால்நடை தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் லாலு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மொத்தம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக  ஜாமீன் பெற்று தற்போது லாலு வெளியில் உள்ளார். 

சி.பி.ஐ.

இந்நிலையில் டோர்தனா கருவூலத்திலிருந்து ரூ.139.55 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 75  பேர் குற்றவாளிகள் என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விவரம் 18ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தகவல். பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் லாலு குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது குறித்து பா.ஜ.க.வின் மாநிலங்களவை எம்.பி. கோபால் நாராயண் சிங் கூறியதாவது: லாலு யாதவ் செய்த அக்கிரமங்களுக்கு வெகுமதி கிடைக்கிறது. ஆட்சியில் இருந்தபோது பயமின்றி தவறுகளை செய்தார்.

கோபால் நாராயண் சிங்

எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை  செய்வீர்கள் என்று போஜ்புரியில் ஒரு பழமொழி உண்டு. லாலு பிரசாத் யாதவ் செய்த முதல் தவறு பீகாரின் பொருளாதாரத்தை தரைமட்டமாக்கியது. சமூக மட்டத்தில் கூட, பீகார் மோசமாக அழிக்கப்பட்டது. அவர் (லாலு பிரசாத் யாதவ்) மக்களை மதம் மற்றும் சாதியின் பெயரால் பிரித்தார். இதன் விளைவாக லாலு பிரசாத் யாதவின் அரசியல் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்து விட்டது. மேலும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் இருப்பும் நெருக்கடியில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.