நுபுர் சர்மா விவகாரம்.. மதச்சார்பற்ற தலைவர்களை கடுமையாக சாடிய கவுதம் காம்பீர்..

 
கவுதம் காம்பீர்

மன்னிப்பு கேட்ட பிறகும் நுபுர் சர்மாவுக்கு எதிரான வெறுப்பு மற்றும் அச்சுறுத்தலுக்கு எதிராக குரல் கொடுக்காத மதச்சார்பற்ற தலைவர்களை  முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க. எம்.பி.யுமான கவுதம் காம்பீர் விமர்சனம் செய்துள்ளார். 

ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக சுமார் 2 வாரங்களுக்கு முன் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தில் பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசுகையில், நபிகள் நாயகத்துக்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது. நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கைது செய்து தண்டனை வழங்கக்கோரி டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. மேலும், நுபுர் சர்மாவை கொலை செய்வோம் என்று சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

நுபுர் சர்மா

இந்நிலையில் நுபுர் சர்மாவுக்கு எதிரான வெறுப்பு மற்றும் அச்சுறுத்தலுக்கு எதிராக குரல் கொடுக்காத மதச்சார்பற்ற தலைவர்களை  முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க. எம்.பி.யுமான கவுதம் காம்பீர் விமர்சனம் செய்துள்ளார். கவுதம் காம்பீர்  இது தொடர்பாக கூறியிருப்பதாவது: கட்சி அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக அவர் (நுபுர் சர்மா) சந்தேகத்திற்கு இடமின்றி மன்னிப்பு கோரியுள்ளார்.

பா.ஜ.க.

அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  எதிரான வெறுப்பு,  கொலை மிரட்டல்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைந்த கலவரங்கள் ஆகியவை கவலையளிக்கின்றன. சகிப்பின்மை இல்லை என்று எங்கள் கட்சியை குற்றம் சாட்டும் அந்த மதச்சார்பற்ற தாராளவாதிகளின் மவுனம் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. கலவரக்காரர்கள் தண்டையின்றி அழிவை உருவாக்கிய சில மாநிலங்களில் வாக்கு வங்கி அரசியல் விளையாடுவது தெளிவாகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.