திரிணாமுல் காங்கிரஸில் மீண்டும் இணைந்த பா.ஜ.க. எம்.பி. அர்ஜூன் சிங்.. மேற்கு வங்க பா.ஜ.க.வுக்கு பின்னடைவு..

 
திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த அர்ஜூன் சிங்

மேற்கு வங்க பா.ஜ.க. எம்.பி. அர்ஜூன் சிங் நேற்று மாலை திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். இது அம்மாநில பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பிரபலமான தலைவர்களில் ஒருவரான அர்ஜூன் சிங் முதலில் திரிணாமுல் காங்கிரஸில் இருந்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரக்பூர் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வென்றார். மேலும் மேற்கு வங்க பா.ஜ.க.வின் துணை தலைவராகவும் இருந்து வந்தார்.  அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, கட்சி தொண்டர்களுக்கு உரிய இடத்தில் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், மாநில துணை தலைவராக இருந்தும் முறையாக பணி செய்ய விடுவதில்லை என  அர்ஜூன் சிங் புகார் தெரிவித்து இருந்தார்.

அர்ஜூன் சிங்

இந்த சூழ்நிலையில்,  கடந்த சில தினங்களாக திரிணாமுல் காங்கிரஸில் அர்ஜூன் சிங் இணைய போவதாக யூக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் அர்ஜூன் சிங் நேற்று மாலை திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் அலுவலகத்துக்கு சென்றார். அபிஷேக் பானர்ஜியை சந்தித்து அவரது முன்னிலையில்  திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.  அபிஷேக் பானர்ஜி டிவிட்டரில், திரிணாமுல் காங்கிரஸ் குடும்பத்தில் சேர பா.ஜ.க.வின் பிளவுப்படுத்தும் சக்திகளை அவர் (அர்ஜூன் சிங்) நிராகரித்தார். தேசம் முழுவதும் மக்கள் துன்பப்படுகிறார்கள், அவர்களுக்கு முன்பை விட இப்போது நாம் அவாகளுக்கு தேவைப்படுகிறோம். போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருப்போம் என்று பதிவு செய்துள்ளார்.

பா.ஜ.க.

பாபுல் சுப்ரியோ மற்றும் முகுல் ராயை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸில் கட்சியில் இணைந்த 3வது பிரபல தலைவர் அர்ஜூன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் இதுவரை 7 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வை விட்டு வெளியேறி விட்டனர். அர்ஜூன் சிங் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவியது மேற்கு வங்க பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.