மேற்கு வங்கத்தை மற்றொரு பாகிஸ்தானாக மாற்ற சதி... மம்தாவை குற்றம் சாட்டிய பா.ஜ.க. எம்.பி.

 
அர்ஜூன் சிங்

மேற்கு வங்கத்தை மற்றொரு பாகிஸ்தானாக மாற்ற சதி செய்கிறார் என்று மம்தா பானர்ஜி மீது பா.ஜ.க. எம்.பி. அர்ஜூன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.


மேற்கு வங்கம் அசன்சோலில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. எம்.பி. அர்ஜூன் சிங் பேசுகையில் கூறியதாவது:  மம்தா பானர்ஜி எப்போதுமே பீகாரிகளுக்கு எதிரானவர். மாநிலத்தில் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன இதனால் அவர்கள் (பீகாரிகள்) வேலை செய்ய முடியாது. பீகார் மக்கள் நமக்கு தொழிலாளர் சக்தியை கொடுத்துள்ளனர்.  அவர் (மம்தா பானர்ஜி) மேற்கு வங்கத்தை மற்றொரு பாகிஸ்தானாக மாற்ற சதி செய்கிறார்.

மம்தா பானர்ஜி

பீகார் மக்கள் வெளியேறினால், அவ்வாறு செய்வது (பாகிஸ்தானா மாற்றுவது) அவருக்கு எளிதாக இருக்கும். மேற்கு வங்கத்தில் எந்த தொழில்கள் மூடப்பட்டாலும் அதில் மம்தா பானர்ஜிக்கு முக்கிய பங்கு உண்டு, அதனால் (தொழில்கள் மூடப்படுவதால்) வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலையில்லாமல் வெளியேறுகிறார்கள். மம்தா பானர்ஜியால் முர்ஷிதாபாத், மால்டா மற்றும் நதியாவை சேர்ந்த 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மாநிலத்துக்கு (மேற்கு வங்கம்) வெளியே வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

சத்ருகன் சின்ஹா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பீகாரிகளுக்கு எதிரானவர் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் எதிர்வரும் அசன்சோல் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பீகாரை சேர்ந்த முன்னாள் பா.ஜ.க. எம்.பி. சத்ருகன் சின்ஹாவை தங்களது வேட்பாளராக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.