அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள்
சென்னையில் இன்று நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இரண்டு பாஜக எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் நிற்கும் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு அதிமுக ஆதரவளிப்பதாக அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் அடையாறில் உள்ள கிராண்ட் பிளாசா ஓட்டலில் நடந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 63 அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் அவர்களில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் எம்எல்ஏக்கள் மட்டும் பங்கேற்றனர். அதிமுகவின் ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் 2 எம்எல்ஏக்களும் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.