புதுச்சேரியில் ஆட்சியை கலைக்க தயாரான பாஜக! முதல்வருக்கு எதிராக போர்க்கொடி

 
rangasamy

புதுச்சேரியில் முதல்வருக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். சுமார்  2 மணி நேரம் நடைபெற்ற  கூட்டத்தில் ரங்கசாமி மீது சராமரி புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பாஜகவுக்கு 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாஜகவில் 6 பேர் தேர்தலில் வென்றனர். ஆட்சி அமைந்து 16 மாதங்களாகியும் வாரியத்தலைவர் பதவிகள் நிரப்பப்படவில்லை. இதனால்  என். ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே உரசல் இருந்து வருகிறது. பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கள் அதிருப்தியை பாஜக புதுவை தலைவர்களிடம் வெளிப்படுத்தி வந்தனர். ஏற்கெனவே ஆட்சி அமைந்த போது இலாகா ஒதுக்கீடு தொடங்கி பல விஷயங்களில் இரு தரப்புக்கும் இடையில் உரசல் போக்கு தொடங்கியது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திலுள்ள கமிட்டி அறையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று இரவு வரை நடந்தது. இக்கூட்டத்தில் பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார், எம்பி செல்வகணபதி, பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களில் சிவசங்கர், கொல்லப்ள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோரும் பங்கேற்றனர். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி மீது கடும் விமர்சனத்தை கட்சித்தலைமையிடம் பாஜக எம்எல்ஏக்கள் முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம், என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொகுதிகளில் மட்டும் பணிகள் நடக்கிறது. பாஜக எம்எல்ஏ தொகுதிகள் புறக்கணிக்கப்படுகிறது என்றார். கட்சி தலைமையோ, கூட்டணியில் இருப்பதால் அவசரப்படக்கூடாது. தலைமையில் சொல்லி முடிவு எடுப்போம் என்றனர். கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “இது வழக்கமான கூட்டம். பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்து மக்கள் பணிகள் தொடர்பாக பேசினோம். தங்கள் தொகுதி பிரச்சினைகள், குறைகளை தெரிவித்தனர். தங்கள் தொகுதியில் பணிகள் நடக்காதது. நானும், மாநிலத்தலைவர் சாமிநாதன், எம்பி, பேரவைத்தலைவர் ஆகிய நால்வரும் குறைகளை கேட்டோம். முதல்வரிடம் தெரிவிப்போம். இது அதிருப்தி இல்லை. குறைதான்.” என தெரிவித்தார்.