சிறுமிகள் ஏலம் விடப்படும் விவகாரம்.. இன்றைய காலகட்டத்தில் ஷூ கூட 10 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்காது.. காங்கிரஸ் அமைச்சர்
சிறுமிகள் ஏலம் விடப்படும் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, இன்றைய காலகட்டத்தில் ஷூ கூட 10 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்காது என்று ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் வாங்கிய கடனை அடைக்க சிறுமிகள் ஏலம் விடப்படுவதாகவும், ஏலம் விடப்பட்ட பின்னர், இந்த சிறுமிகள் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மும்பை, டெல்லி மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு உடல் ரீதியான துஷ்பிரயோகம், சித்தரவதை மற்றம் அடிமைத்தனத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிறுமிகள் ரூ.10 ஆயிரத்துக்கு விற்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து ராஜஸ்தான் அமைச்சர் அசோக் சந்த்னாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் அசோக் சந்த்னா பதிலளிக்கையில், நீங்கள் எந்த உலகில் வாழ்கிறீர்கள். இன்றைய காலகட்டத்தில் ஷூ கூட 10 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்காது, என்ன முட்டாள் தனமாக பேசுகிறீர்கள் என்று பதில் அளித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. பெண்கள் ஏலம் விடப்பட்டது தொடர்பான கேள்விக்கு உணர்ச்சியற்ற மற்றும் கிண்டலான கருத்துக்களை தெரிவித்ததற்காக அமைச்சர் அசோக் சந்த்னாவை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வாசுதேவ் தேவ்னானி டிவிட்டரில், அமைச்சர் அசோக் சந்த்னா பேசிய வீடியோவை ஷேர் செய்து, மாநிலத்தில் குற்றவாளிகள் தலைவிரித்தாடுகிறார்கள். மகள்கள் மீது தினமும் கடுமையான குற்றங்கள் நடக்கின்றன. எல்லையில் மகள்கள் கடத்தப்படுகிறார்கள். இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் உணர்வற்ற அறிக்கைகளை அளிக்கிறது. இத்தகைய ஆட்சியால் ராஜஸ்தான் மக்கள் விரைவில் புஷ்கர் போன்று முழு மாநிலத்திற்கும் செருப்பு வழங்க தயாராக உள்ளனர் என பதிவு செய்து இருந்தார்.