போராட்டக்காரர்களை சரமாரியாக தாக்கும் உ.பி. போலீசார்.. கலவரக்காரர்களுக்கு மறு பரிசு.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.

 
ஷலப் மணி திரிபாதி

உத்தர பிரதேசத்தில் போராட்டக்காரர்களை போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோவை, கலவரக்காரர்களுக்கு மறு பரிசு என்ற தலைப்பில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வெளியான ஒரு வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், உத்தர பிரதேசத்தில் காவல் நிலையம் ஒன்றில், போராட்டக்காரர்கள் என்று கூறப்படும் சிலரை இரண்டு காவலர்கள் லத்தியால் சரமாரியாக அடிப்பதும், அடி வாங்குபவர்கள் வலி தாங்க முடியாமல் கெஞ்சுவதையும் காணலாம். இந்த வீடியோ சஹாரன்பூரில் உள்ள காவல் நிலையத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கலவரக்காரர்களை லத்தியால் அடிக்கும் போலீஸ்

நுபுர் சர்மாவின் முகமது நபிக்கு எதிராக கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக, சஹரன்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு இரு சமூகத்தினருக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை சிலரை போலீசார் கைது செய்தனர். அந்த வீடியோவில் அவர்களைதான் போலீசார் அடித்ததாக கூறப்படுகிறது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முன்னாள் ஊடக ஆலோசகரும், அம்மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான  ஷலப் மணி திரிபாதி டிவிட்டரில், கலவரக்காரர்களுக்கு மறு பரிசு என்ற தலைப்பில் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்து இருந்தார். 

அகிலேஷ் யாதவ்

அதேசமயம் அகிலேஷ் யாதவ் டிவிட்டரில் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்து, இது போன்ற சம்பவங்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும். இதுபோன்ற காவல் நிலையங்கள் குறித்து கேள்விக்கள் எழுப்பட வேண்டும். காவல் மரணங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தலித்துக்களை துஷ்பிரயோகம் செய்வதில் முதலிடத்தில் உள்ளது என பதிவு செய்து இருந்தார்.