இது ராமர் மற்றும் சீதாதேவியின் நாடு, முஸ்லிம்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை... பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆவேசம்

 
திகந்தா கலிதா

இந்துக்கள் முஸ்லிம்களின் பார்முலாவை பின்பற்றி இளம் வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற பதுருதீன் அஜ்மலின் கருத்துக்கு, இது ராமர் மற்றும் சீதாதேவியின் பூமி, முஸ்லிம்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்று அசாம் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பதுருதீன் அஜ்மல் செய்தியாளர்களை சந்திப்பின் போது கூறியதாவது: முஸ்லிம் ஆண்கள் 20 முதல் 22 வயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள், முஸ்லிம் பெண்கள் 18 வயதில் திருமணம் செய்கிறார்கள்-சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வயது. மறுபுறம் (இந்துக்கள்) திருமணத்துக்கு முன் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சட்டவிரோத மனைவிகள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்க மாட்டார்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் மற்றும் பணத்தை சேமிக்கிறார்கள். 40 வயதுக்கு பிறகு, அவர்கள் (இந்துக்கள்) பெற்றோரின் அழுத்தத்தால் திருமணம் செய்து கொள்கிறார்கள். 

பத்ருதீன் அஜ்மல்

எனவே 40 வயதுக்கு பிறகு  அவர்கள் குழந்தைகளை பெறுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? வளமான நிலத்தில் விதைத்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும். அப்போதுதான் வளர்ச்சி இருக்கும்.  அவர்களும் (இந்துக்கள்) முஸ்லிம்களின் பார்முலாவைப் பின்பற்றி, தங்கள் மகன்களுக்கு 20-22 வயதிலும், அவர்களின் பெண்குழந்தைகளுக்கு 18 முதல் 20 வயதிலும் திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்படியானால் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்று பாருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். பதுருதீன் அஜ்மலின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்துக்கள்

இது தொடர்பாக அசாம் பா.ஜ.க. எம்.எல்.ஏ. திகந்தா கலிதா கூறியதாவது: நீங்கள் ஒரு முஸ்லிம், நாங்கள் இந்துக்கள். நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமா? இது ராமர் மற்றும் சீதாதேவியின் நாடு. வங்கதேசத்தினருக்கு இங்கு இடமில்லை. முஸ்லிம்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. இப்படி சொல்வதன் மூலம் உங்கள் தாய், சகோதரி மீது குற்றச்சாட்டுகளை வைக்கிறீர்கள். நான் அதை கண்டிப்பதோடு, அதை செய்யாதீர்கள், இல்லையெனில் வங்கதேசத்துக்கு சென்று அதை செய்யுங்கள் என்று எச்சரிக்கிறேன். இந்துக்கள் அதனை ஏற்க மாட்டார்கள். அரசியலுக்காக இவ்வளவு கீழ்த்தரமாக நின்று உங்கள் தாயையும், சகோதரியையும் விற்காதீர்கள். அவர்களின் கண்ணியத்தை மிதிக்காதீர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.