சுப்பிரமணியன் சுவாமி எனக்கு சர்டிபிகேட் கொடுக்க தேவையில்லை- அண்ணாமலை

 
annamalai

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜக நிர்வகியான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே ஏற்பாட்டில் 30க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “காயத்ரி ரகுராம் எங்கு சென்றாலும் நன்றாக இருக்கட்டும். திமுகவை நான் ஆக்ரோசமாக எதிர்த்து வருகிறேன், பாஜகவில்  சிலர் தவறாக திமுகவுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் , அதனால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுப்பிரமணியன் சுவாமி உட்பட கட்சிக்கு 30, 40 ஆண்டுகளாக உழைத்துள்ளேன்  என்று சொல்லி கொள்வோரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அவர்களது வீட்டுக்கு சென்று நான் தேநீர் அருந்திக் கொண்டிருக்க முடியாது. நான் நல்லவனா..? என சுப்பிரமணியன் சுவாமி சர்டிபிகேட் கொடுக்க தேவையில்லை.

கட்சியில் சிலர்  என்னை எதிர்ப்பது நல்லதுதான் , வளரும் கட்சி என்றால் அப்படித்தான் இருக்கும். பாஜக அடிமைக் கட்சியல்ல. 10 ல் 2 பேர் என்னை எதிர்க்கத்தான் செய்வார்கள். அதை நான் வரவேற்கிறேன். நாங்கள் வாரிசு அரசியல் நடத்தவில்லை. 18 கோடி தொண்டர்கள்  இருக்கும் கட்சி இது , பாஜகவில் எங்கோ யாரோ ஒருவர் மகன் வேண்டுமானால் பதவிக்கு வந்திருக்க முடியும். அதை வாரிசு அரசியல் என்று கூற முடியாது . பிரதமர் தமிழகத்தில் போட்டியிட  வேண்டும் என தமிழக பாஜக சார்பில் நாங்கள் விரும்புகின்றோம் , அது குறித்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் தேசிய தலைமையிடம் இருந்து வரவில்லை” எனக் கூறினார்.

முன்னதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் நான் மட்டும்தான் திமுகவுக்கு எதிர்க்கட்சிபோல் தெரிகிறது. ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பாஜக இருக்கிறது. சினிமா கலாச்சாரம் தமிழக பாஜகவை அழித்துவிட்டது” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.