பா.ஜ.க.வில் இணைந்ததை கிண்டலடித்த கபில் சிபலுக்கு ஒராண்டு கழித்து பதிலடி கொடுத்த பா.ஜ.க. அமைச்சர் ஜிதின் பிரசாதா..

 
குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள், சிறியவர்களாகவே இருப்பார்கள்.. குப்பை என்ற காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த ஜிதின் பிரசாதா

கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்ததற்காக தன்னை கிண்டலடித்த கபில் சிபலுக்கு, தற்போது ஜிதின் பிரசாதா கிண்டலாக பதிலடி  கொடுத்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவரும், உத்தர பிரதேசத்தில் பிராமண சமூகத்தில் செல்வாக்கு மிக்க தலைவருமான ஜிதின் பிரசாதா கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்  அரசாங்கத்தில் அமைச்சராக உள்ளார். ஜிதின் பிரசாதா காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தபோது, அப்போது காங்கிரஸில் இருந்த கபில் சிபல், ஜிதின் பிரசாதாவை கிண்டல் செய்து இருந்தார்.

கபில் சிபல்

கடந்த ஆண்டு கபில் சிபல் டிவிட்டரில், ஜிதின் பிரசாதா பா.ஜ.க.வில் இணைந்தார். கேள்வி என்னவென்றால், அவர் பா.ஜ.க.விடம் இருந்து பிரசாதம் பெறுவாரா அல்லது இது உத்தர பிரதேச தேர்தலுக்கான ஆள் பிடிப்பா?. இது போன்ற ஒப்பந்தங்களில் சித்தாந்தம் முக்கியமில்லை என்றால்,  மாறுவது (கட்சி தாவுவது) எளிது என பதிவு செய்து இருந்தார். கபில் சிபல் அன்று கிண்டல் செய்ததற்கு ஜிதின் பிரசாதா தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

கபில் சிபல், அகிலேஷ் யாதவ்

கபில் சிபல் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். மேலும், சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன், உத்தர பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து கபில் சிபலுக்கு பா.ஜ.க. அமைச்சர் ஜிதின் பிரசாதா கிண்டலாக பதிலடி கொடுத்து பழிதீர்த்துக் கொண்டார். ஜிதின் பிரசாதா டிவிட்டரில், கபில் சிபல் ஆண்டு தன்னை கிண்டலடித்து டிவிட் செய்த பதிவை பதிவேற்றம் செய்து, பிரசாதம் எப்படி இருக்கு மிஸ்டர் கபில் சிபல்! மாநிலங்களவை, கபில் சிபல் என பதிவு செய்துள்ளார். சமாஜ்வாடி ஆதரவில் மாநிலங்களவைக்கு கபில் சிபல் தேர்ந்தெடுக்க உள்ளதை குறிப்பிட்டு ஜிதின் பிரசாதா பதிவு செய்துள்ளார்.