விழிபிதுங்கும் எடப்பாடி! கொடநாடு வழக்கில் சசிகலா கொடுக்கும் அழுத்தம்

 
es

 கொடநாடு வழக்கில் சசிகலாவும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டதால் விழி பிதுங்கி நிற்கிறார் எடப்பாடி என்கிறது அதிமுக வட்டாரம் .

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை,  தொடர்ந்து ஊடகங்கள் முன்வைத்து வருகின்றன .  இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓபிஎஸ் -இபிஎஸ் மோதல் வெடிக்கும் போதெல்லாம் இந்த கொடநாடு விவகாரமும் பூதாகரமாக வெடிக்கிறது.  தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருப்பதால் கொடநாடு விவகாரம் உச்சத்திற்கு வந்திருக்கிறது.

sa

நான் ஆட்சிக்கு வந்தால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை என்ன என்பதை  தெரியப்படுத்துவேன்.  கொடநாட்டில் நடந்த முடி மறைக்கப்பட்ட மர்மங்களை வெளிக்கொண்டு வருவேன். உண்மை குற்றவாளிகளை சிறையில் அடைப்பேன் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார் மு. க .ஸ்டாலின். அவர் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆகிவிட்டதால் சொன்ன வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்று நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் , அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் விப. ஜெயபிரதீப்,  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் சங்கரலிங்கம் பூங்குன்றன் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 இந்த நிலையில் சசிகலாவும் கொடநாடு வழக்கில் முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று சொல்லி அந்த வழக்கின் விசாரணைக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறார்.  

nee

 திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முடிந்து போய்விட்டது என்று நினைத்த கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மறு விசாரணை நடந்து வருகிறது .  5 தனி படைகள் அமைக்கப்பட்டு இதுவரைக்கும் 200க்கும் மேற்பட்டோர் இடம் விசாரணைகள் நடந்துள்ளன.  அதில் சசிகலாவிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடைபெற்றது . அவரது உறவினரும் ஜெயா டிவி நிர்வாகியுமான விவேக்கிடமும் விசாரணை நடந்திருக்கிறது .  கொடநாட்டில் நடந்த கொலை கொள்ளை சம்பவங்களோடு மட்டுமல்லாது அது தொடர்பாக பலர் மர்மமான முறையில் இறந்ததால் கொடநாடு  வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ja

 இந்த நிலையில் தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி பகீரத முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் , அதிமுகவின் பொதுச் செயலாளர் நான்தான் என்று தற்போது வரைக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் சசிகலா,   கொடநாடு வழக்கில் விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கிறார். திண்டிவனத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட சசிகலா மக்களை சந்தித்து பேசிய  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் .  அப்போது,   ’’கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக என்னிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.  போலீஸ் கேட்ட கேள்விகளுக்கு நான் முறையாக பதில் சொல்லி இருக்கிறேன். ஆனால் அரசாங்கம் கொடநாடு வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’ என்றார் . 

ttv

முதல்வர் இன்னும் தேர்தலில் அளித்த வாக்குறுதி படி கொநாடு வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற கேள்விக்கு தேர்தல் சமயத்தில் தற்போது இருக்கக்கூடிய முதல்வர் கொடநாடு வழக்கு தொடர்பாக ஆட்சிக்கு வந்ததுமே உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார்.  ஆனால் ஏன் எடுக்கவில்லை என்று அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

 ஓபிஎஸ் மகன்,  மருது அழகுராஜ்,  டிடிவி தினகரன்,  சங்கரலிங்கம் பூங்குன்றன் உள்ளிட்டோர் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் தற்போது சசிகலாவும் கொடநாடு வழக்கில் அழுத்தம் கொடுத்து இருப்பதால் விழிபிதுங்கி நிற்கிறார் எடப்பாடி என்கிறது அதிமுக வட்டாரம்.