ராகுல் காந்தி காஷ்மீரை அடையும் நேரத்தில், இந்தியா காங்கிரஸ் இல்லாத பாரத்தை காணும்.. அசாம் பா.ஜ.க. அமைச்சர்

 
பிஜூஷ் ஹசாரிகா

அசாம் காங்கிரஸில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை குறிப்பிட்டு, ராகுல் காந்தி காஷ்மீரை அடையும் நேரத்தில், இந்தியா காங்கிரஸ் இல்லாத பாரத்தை காணும் என்று அசாம் அமைச்சர் பிஜூஷ் ஹசாரிகா தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி செப்டம்பர் 7ம் தேதியன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான  இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். இந்திய ஒற்றுமை நடைப்பயண திட்டத்தின்படி, ராகுல் காந்தி மொத்தம் 3,500 கி.மீ. தொலைவை 5 மாதங்களில் நிறைவு செய்கிறார். இந்திய ஒற்றுமை பயணம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கும். வரும் நவம்பர் 1ம் தேதியன்று அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடக்கிறது.

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

அசாமில் நடக்க உள்ள இந்திய ஒற்றுமை நடைபயணம் குறித்து விவாதிக்க நேற்று முன்தினம், துப்ரியில் உள்ள ராஜீவ் பவனில் அம்மாநில காங்கிரஸார் கூட்டம் ஒன்றை நடத்தினர். அப்போது அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் சில தலைவர்கள் முன்னிலையில் அந்த கட்சியின் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம், கட்சிக்குள் பிளவுகள் இல்லை, சில தவறான கருத்துக்கள் நிலவுகிறது என லோக்கல் தலைவர்கள் தெரிவித்தனர்.

காங்கிரஸ்

அசாம் காங்கிரஸின் இரு குழுக்கள் இடையே நடைபெற்ற மோதலை குறிப்பிட்டு அந்த கட்சியை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அசாம் அமைச்சருமான பிஜூஷ் ஹசாரிகா டிவிட்டரில், காங்கிரஸ் கூட்டத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ கிளிப்பை ஷேர் செய்து, அவர் (ராகுல் காந்தி) காஷ்மீரை அடையும் நேரத்தில், இந்தியா காங்கிரஸ் இல்லாத பாரத்தை காணும் என்று தெரிகிறது என பதிவு செய்து இருந்தார்.