அந்த ரத்தம் சிந்தும் நாட்களை மாநிலத்துக்கு திரும்ப விடாதீர்கள், இன்னும் 5 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வை ஆசிர்வதியுங்க.. ஹிமாந்தா

 
ஹிமாந்தா பிஸ்வா சர்மா

அந்த ரத்தம் சிந்தும் நாட்களை மாநிலத்துக்கு திரும்ப விடாதீர்கள், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வை ஆசிர்வதிக்க என்று திரிபுரா வாக்காளர்களிடம் அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா வேண்டுகோள் விடுத்தார்.

திரிபுராவில் முதல்வர் மாணிக் சாஹா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் 60 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பா.ஜ.க. தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தின் கில்லா பகுதியில் நடந்த ஜன் விஸ்வாஸ் பேரணியில் அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா கலந்து கொண்டார். அந்த பேரணியில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா உரையாற்றுகையில் கூறியதாவது: திரிபுரா முன்பு கொலைகள், படுகொலைகள் மற்றும் கற்பழிப்புகளுக்கு பெயர் பெற்றது. ஆனால் இப்போது அமைதி நிலவுகிறது.

மாணிக் சாஹா

அந்த ரத்தம் சிந்தும் நாட்களை மாநிலத்துக்கு திரும்ப விடாதீர்கள். பா.ஜ.க. ஆட்சியில் திரிபுரா மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.  மத்தியில் மோடி அரசாங்கமும், மாநிலத்தில் உள்ள மாணிக் சாஹா நிர்வாகமும் தலா 50 கி.மீ. வேகத்தில் பங்களிப்புடன் திரிபுராவின் தற்போதைய வளர்ச்சி வேகம் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் உள்ளது. இரண்டு வருடங்கள் கோவிட்-19 பரவாமல் இருந்திருந்தால் வளர்ச்சி வேகம் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் இருந்திருக்கும். இத்தனை ஆண்டுகளில் இடது முன்னணியால் சாதிக்க முடியாததை பா.ஜ.க. வெறும் ஐந்தாண்டுகளில் செய்துள்ளது. 

மோடி

இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வை ஆசிர்வதிக்க வேண்டும். மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால், வளர்ச்சி வாகனத்தின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் இருக்கும். மாநிலத்தில் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தடய அறிவியல பல்கலைக்கழக வளாகங்கள், 10 புதிய பட்டயக் கல்லூரிகள் ஆகியவை முதல்வர் மாணிக் சாஹா மற்றும் அவருக்கு முன் இருந்த பிப்லப் குமார் டெப் ஆகியோரின் சில சாதனைகள். அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத அகவிலைப்படியும், சமூக ஓய்வூதியம் மாதம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.