கடந்த 27 ஆண்டுகளில் பா.ஜ.க. என்ன செய்தது என்பதை குஜராத் மக்கள் இந்த முறை உணர்ந்து கொள்வார்கள்.. அசோக் கெலாட்
குஜராத்தில் கிராமங்களில் நாங்கள் பலமாக இருக்கிறோம், கடந்த 27ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு என்ன செய்தது என்பதை மாநில மக்கள் இந்த முறை உணர்ந்து கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என காங்கிரஸின் அசோக் கெலாட் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது குஜராத்தில் காங்கிரஸ் நிலவரம், ஆம் ஆத்மி குறித்து உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அசோக் கெலாட் வெளிப்படையாக பதிலளித்தார். அசோக் கெலாட் பேட்டியின் போது கூறியதாவது: நாங்கள் இல்லை என்று மக்கள் நினைக்கலாம், ஆனால் நாங்கள் குஜராத்தில் பெரிய அளவில் பிரச்சாரம் செய்கிறோம். கிராமங்களில் நாங்கள் பலமாக இருக்கிறோம். நகரங்களில் நாங்கள் பலவீனமாக இருக்கலாம்.
ஆனால் 27 ஆண்டுகளில் (பா.ஜ.க.) என்ன செய்தார்கள் என்பதை மக்கள் இந்த முறை உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். காங்கிரஸின் பலம் கிராமங்களில் இருப்பது, அங்கு பூத் அளவில் வலுவான அமைப்பை கட்சி கொண்டுள்ளது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ஒரு பாதை இருக்கிறது, அவர்கள் அதை பின்பற்றுவார்கள். குஜராத் அல்லது இமாச்சல பிரதேசத்தில் எங்களது பிரச்சாரம் உள்ளது. தேவைப்பட்டால் அவரும் வருவார். ஆனால் இங்கு ஒரு குறையும் இல்லை, தலைவர்கள் வருகிறார்கள், கிராமங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள்.
டெல்லி மற்றும் பஞ்சாபில் தவறான நிர்வாகத்தை வழங்கிய பிறகு ஆம் ஆத்மி அதிக இலக்கு வைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கூட காங்கிரஸின் அமைதியான பிரச்சாரத்தை கவனியுங்கள் என்று கூறுகிறார். அங்கு (ஆம் ஆத்மி கட்சியில்) பெரும் பில்டப் உள்ளது. பிரச்சாரம் தொடர்கிறது, குஜராத்தில் நாங்கள் சண்டையிடவில்லை என்று சொல்வது தவறு. காங்கிரஸ் சரியான பாதையில் உள்ளது. கட்சி தலைவர் தேர்தல் நடந்தது. பா.ஜ.க. எப்போது தேர்தலை நடத்துகிறது? ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி எப்போது தலைவர்கள் ஆனார்கள் என்பது நமக்கு தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.