பல முறை வேண்டுகோள் விடுத்தும் பிரதமர் மோடி அதை செய்யவில்லை.. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

 
அசோக் கெலாட்

தேசத்துக்கு அமைதி மற்றும் ஒற்றுமைக்கான செய்தியை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் நாங்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதை அவர் செய்யவில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பா.ஜ.க.வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேஸ்புக்கில போஸ்ட் போட்டதற்காக டெய்லர் கண்ணையா லால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும்  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்த மாநிலத்தில் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து டெய்லர் படுகொலை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் உரையாற்ற வேண்டும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தினார்.

காங்கிரஸ்

ஆனால் பிரதமர் மோடி இது தொடர்பாக மவுனமாக உள்ளார். இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசத்துக்கு அமைதி மற்றும் ஒற்றுமைக்கான செய்தியை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் நாங்கள் பலமுறை வேண்டுகோள் விடுக்கிறோம், ஏனெனில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அவர் ஏன் அதை சொல்ல மறுக்கிறார் என்பது எனக்கு புரியவில்லை. அவருக்கு இப்படி (பேசாதீர்கள்) அறிவுரை கூறுவது யார்? 

மோடி

அவர் (மோடி) வேண்டுகோள் விடுத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று நான் நம்புகிறேன். கண்ணையா லாலின் குடும்பத்தின் நிலையை பார்த்து, இரண்டு குழந்தைகளுக்கும் அரசு வேலை கொடுப்பது என்ற சரியான முடிவை எடுத்துள்ளோம். இது எங்களின் கடமை. ஆத்திரமூட்டப்பட்டாலும் நமது ஒழுக்கத்தை நாம் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.