காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும்... அசோக் கெலாட்

 
ராகுல் காந்தி

காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு பொறுப்பேற்று அப்போது அந்த கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி பதவி விலகினார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சிக்கு முழுநேர தலைவர், கட்சி அமைப்பில் மாற்றங்கள் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.

சோனியா காந்தி

இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. மேலும் 2020 ஆகஸ்ட் மாதத்தில் பதவி விலகுவதாக சோனியா காந்தி தெரிவித்தார் ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி அவரை தொடர்ந்து பதவி வகிக்கும்படி கோரியது. இதனையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் நீடிப்பதாக சோனியா காந்தி தெரிவித்தார். அதேசமயம் கட்சிக்குள் ஒரு தரப்பினர் ராகுல் காந்தி மீண்டும் கட்சி தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை. இந்நிலையில் செப்டம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 

வரணும்… காங்கிரஸ் தலைவரா மீண்டும் ராகுல் காந்தி வரணும்… அசோக் கெலாட் கோரிக்கை

இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: ராகுல் காந்தி கட்சித் தலைவராக வரவில்லை என்றால், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸார்களுக்கு ஏமாற்றம்தான். அவர் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு இந்த பதவியை ஏற்க வேண்டும். ஒருமித்த கருத்து அவர் தலைவர் ஆவதற்கு ஆதரவாக உள்ளது. எனவே அவர் அதை ஏற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது காந்தி அல்லது காந்தி அல்லாத குடும்பத்தை பற்றியது அல்ல. இது அமைப்பின் வேலை, யாரும் பிரதமர் ஆகவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.