சோனியா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட ராஜஸ்தான் முதல்வர்

 
அசோக் கெலாட்

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கலகத்துக்கு சோனியா காந்தியிடம் மன்னிப்பு கேட்டதாகவும், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்றும் அசோக் கெலாட் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்அசோக் கெலாட் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் நிலவியது. அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு கொடுக்க காங்கிரஸ் தலைமை விரும்பியதாக தெரிகிறது. ஆனால் அசோக் கெலாட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் இதனை விரும்பவில்லை. சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை கொடுத்தால் நாங்கள் ராஜினாமா செய்வோம் என்று அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கட்சி தலைமைக்கு மிரட்டல் விடுத்தனர். இது காங்கிரஸ் தலைமைக்கு  அசோக் கெலாட் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.

பிரியங்கா காந்தி வலுவான எதிராளி என்பதால்தான் மத்திய அரசு அவரை குறிவைக்கிறது- அஜய் மாக்கன் கண்டுபிடிப்பு

ராஜஸ்தானில் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கலகம் குறித்து அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் அஜய் மாக்கன், மல்லிகார்ஜூன் கார்கே சோனியா காந்தியிடம் அறிக்கை அளித்தனர். இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் நேற்று சோனியா காந்தியை சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை அசோக் கெலாட் சந்தித்தார். அப்போது அசோக் கெலாட் கூறியதாவது: இந்த சூழ்நிலையில் தார்மீக பொறுப்புடன் நான் இந்த (காங்கிரஸ் தலைவர்) தேர்தலில் போட்டியிட மாட்டேன். ராஜஸ்தான் முதல்வராக நீடிப்பது குறித்து நான் முடிவு செய்ய மாட்டேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்வார். 

சோனியா காந்தி

சோனியா காந்தியுடன் நீண்ட நேரம் பேசினேன். கடந்த 50 ஆண்டுகளில், இந்திரா காந்தி ஆட்சியில் இருந்த காலம் முதல் கட்சி எப்போதும் என்னை நம்பி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் (ராஜஸ்தானில் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கலகம்)  எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நான் முதல்வராக இருக்க வேண்டும் என்பதற்கான இவை அனைத்தும் நடந்தன என்ற ஒரு செய்தியை கொடுத்தன. சோனியா காந்தியிடம் மன்னிப்பு கேட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.