மோடி அரசு வரலாற்றை பற்றிய உண்மையை சொல்ல விரும்பவில்லை... ராஜஸ்தான் முதல்வர்

 
அசோக் கெலாட்

மோடி அரசு வரலாற்றை பற்றிய உண்மையை சொல்ல விரும்பவில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது: பண்டித ஜவஹர்லால் நேரு இல்லாமல் எந்த அமிர்த மஹோத்ஸவ் (அமிர்த விழா) வெற்றியடையாது. பா.ஜ.க. ஆட்சியில் இந்திரா காந்தியை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. பல சிறந்த சுதந்திர போராட்ட வீரர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் (பா.ஜ.க.) அவர்களை பற்றி பேசுவதில்லை. மோடி அரசு வரலாற்றை பற்றிய உண்மையை சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கஜேந்திர சிங் ஷெகாவத்

அசோக் கெலாட்டின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அமைச்சர்  கஜேந்திர சிங் ஷெகாவத் அவரை கடுமையாக சாடினார். கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காந்தி குடும்பத்தின் மீதான பக்தியை தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. இந்திரா காந்தி மற்றும் நேருவின் பெயர்கள் ஏற்கனவே பட்டியலில் இருந்தன. ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் (சுதந்திர அமிர்த விழா) என்பதன் வரையறையை அசோக் கெலாட் புரிந்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.

சோனியா காந்தி

அண்மையில் சோனியா காந்தி தனது சுதந்திர தின அறிக்கையில், மத்திய பா.ஜ.க. அரசு தனது அரசியல் பிரச்சாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக மகாத்மா காந்தி, ஜவஹாலால் நேரு போன்ற தலைவர்களை கேவலப்படுத்த முயற்சிக்கிறது. சுதந்திர போராட்டத்தின்போது இந்திய படைகள் செய்த தியாகங்களை மத்திய அரசு சிறுமைப்படுத்த முயற்சி செய்கிறது. இந்த நாசீசிச அரசாங்கம் வரலாற்று உண்மைகளை பொய்யாக்குவதற்கும் காந்தி-நேரு-ஆசாத் படேல் போன்ற தலைவர்களை கேவலப்படுத்த எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும்  இந்திய தேசிய காங்கிரஸ் எதிர்க்கும் என்று தெரிவித்து இருந்தார்.