வேறு எந்த நாட்டிலும் இது நடக்காது. நாடு எந்த திசையில் செல்கிறது என்பது நமக்கு தெரியாது... அசோக் கெலாட் தாக்கு

 
அசோக் கெலாட்

மத்திய அரசு, முந்தைய அரசுகள் மற்றும் முன்னாள் பிரதமர்களின் பாரம்பரியத்தை மறந்து விடுவதில் தீவிரமாக உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இது நடக்காது. நாடு எந்த திசையில் செல்கிறது என்பது நமக்கு தெரியாது என அசோக் கெலாட் குற்றம் சாட்டினார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று ராஜீவ் காந்தியின் நினைவு நாள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அசோக் கெலாட் கூறியதாவது: தற்போதைய அரசு (மத்திய அரசு) முந்தைய அரசுகள் மற்றும் முன்னாள் பிரதமர்களின் பாரம்பரியத்தை மறந்து விடுவதில் தீவிரமாக உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இது நடக்காது. நாடு எந்த திசையில் செல்கிறது என்பது நமக்கு தெரியாது. 

இந்திரா காந்தி

கடந்த 70 ஆண்டுகளில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் பியாந்த் சிங் ஆகியோர் தங்கள் உயிரை இழந்தனர். ஆனால் நாம் காலிஸ்தானை உருவாக்க அனுமதிக்கவில்லை. இன்று, பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்து வருகின்றன. இதுபோன்ற சமூக விரோதிகளை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம், அவர் ஏன் அவ்வாறு செய்ய தயங்குகிறார்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி

கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார். இதனை அசோக் கெலாட் நேற்று முன்தினம் விமர்சனம் செய்து இருந்தார். ஜனநாயகத்தில், எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது. நாளை பொதுமக்களின் மனநிலை எப்படி இருக்கும், இதை யாராலும் சொல்ல முடியாது. எனவே இது அவரது (மோடி) திமிர், நேரம் வரும்போது மக்கள் பதில் அளிப்பார்கள் என அசோக் கெலாட் தெரிவித்து இருந்தார்.