காங்கிரஸ் அரசை காப்பாற்றிய 102 எம்.எல்.ஏ.க்களை என்னால் கைவிட முடியாது... ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

 
அசோக் கெலாட்

காங்கிரஸ் அரசை காப்பாற்றிய 102 எம்.எல்.ஏ.க்களை நான் எப்படி கைவிட முடியும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக பேசினார்.


ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் கூறியதாவது: நான் எனது பணியை செய்து வருகிறேன். ஒரு முடிவை (முதல்வரை மாற்றுவது) எடுக்க வேண்டும் என்றால், அதை கட்சி மேலிடம் தான் எடுக்க வேண்டும். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் சிலர் அமித் ஷா, தர்மேந்திர பிரதான் மற்றும் பிற தலைவர்களை சந்தித்தனர். எங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு அமித் ஷா இனிப்பு வழங்கி கொண்டிருந்தார். காங்கிரஸ் அரசை காப்பாற்றிய 102 எம்.எல்.ஏ.க்களை (தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்) நான் எப்படி மறக்க (கைவிட) முடியும். 

அமித் ஷா

அரசியல் நெருக்கடியின் போதும் சரி, கொரோனா காலத்திலும் சரி எனக்கு தேவைப்படும் போதெல்லாம் மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. எனவே அவர்களிடமிருந்து நான் எவ்வாறு விலகி இருக்க முடியும். மாநிலத்தில் புதிய முதல்வரின் பெயர் (சச்சின் பைலட்)  குறித்து எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் ஏன் அதிருப்தி ஏற்பட்டது என்பதை ஆராய வேண்டும். நான் ஜெய்சல்மரில் இருந்தேன். என்னால் யூகிக்க முடியவில்லை, ஆனால் புதிய முதல்வர் யார் என்பதை எம்.எல்.ஏ.க்கள் உணர்ந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கட்சியின் முதுகில் குத்திவிட்டார்… சச்சின் பைலட் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்.. அசோக் கெலாட் ஆவேசம்

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்அசோக் கெலாட் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் நிலவியது. அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு கொடுக்க காங்கிரஸ் தலைமை விரும்பியதாக தெரிகிறது. ஆனால் அசோக் கெலாட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் இதனை விரும்பவில்லை. சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை கொடுத்தால் நாங்கள் ராஜினாமா செய்வோம் என்று அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கட்சி தலைமைக்கு மிரட்டல் விடுத்தனர். இது காங்கிரஸ் தலைமைக்கு  அசோக் கெலாட் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ராஜஸ்தான் நெருக்கடிக்கு சோனியா காந்தியிடம் அசோக் கெலாட் மன்னிப்பு கேட்டார் மற்றும் தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து விலகினார்.