தலைவர் பதவி.. நான் தேவை என்று கட்சியில் உள்ளவர்கள் நினைத்தால், வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்... அசோக் கெலாட்

 
அசோக் கெலாட்

நான் தேவை என்று கட்சியில் உள்ளவர்கள் நினைத்தால், காங்கிரஸ் தலைவர் பதவியை வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒரு பிரிவினர் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் உறுதியாக நிற்கின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக வெளியான தகவல் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்நிலையில், அடுத்த திருப்பமாக, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் முக்கிய போட்டியாளராக இருப்பார் என செய்தி வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தி

ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த  தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: கட்சியும், தலைமையும் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளன. நான் 40-50 ஆண்டுகளாக பதவியில் இருக்கிறேன். என்னை பொறுத்தவரை எந்த பதவியும் முக்கியமில்லை, கட்சி எனக்கு கொடுக்கும் எந்த பொறுப்பையும் நிறைவேற்றுவேன். 

சசி தரூர்

கட்சியின் தலைவர் அல்லது முதல்வர் பதவிக்கு நான் தேவை என்று கட்சியில் உள்ளவர்கள் நினைத்தால், நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் மீண்டும் ராகுல் காந்தியிடம் (காங்கிரஸ் தலைவராவதற்கு) கோரிக்கை வைப்பேன். அவர் கட்சி தலைவராக இந்திய ஒற்றுமை பயணத்தை நடத்தினால், அது கட்சிக்கு ஒரு பேராற்றலை உருவாக்கும். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூடன் போட்டியிட வாய்ப்புள்ளதாக என்றால், உள் கட்சி ஜனநாயகத்துக்கு போட்டி நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.