அரசாங்கங்களை கவிழ்க்க அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது.. அசோக் கெலாட் குற்றச்சாட்டு

 
அசோக் கெலாட்

அமலாக்கத்துறை சி.பி.ஐ.யை விட சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளது. மகாராஷ்டிராவில் நீங்கள் பார்த்தது போல் அரசாங்கங்களை கவிழ்க்க அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் மூன்றாவது முறையாக நேற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பல இடங்களில் போராட்டமும் நடத்தியது. டெல்லியில் ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அசோக் கெலாட் கூறியதாவது: 

சோனியா காந்தி

அமலாக்கத்துறை நாட்டில் நாடகத்தை உருவாக்குகிறது. முதலில் ராகுல் காந்திககு சம்மன் அனுப்பினார்கள். ஐந்து நாட்களில் பல மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சோனியா காந்திக்கு இன்று (நேற்று) மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எங்களுக்கு தெரியாது. அமலாக்கத்துறை தீவிரவாதத்தை உருவாக்கியுள்ளது. நாட்டில் அமலாக்கத்துறை தீவிரவாதம் குறித்து சரியான நேரத்தில் உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும்.

அமலாக்கத்துறை

5 சதவீதத்துக்கும் குறைவான வெற்றி விகிதத்தை கொண்டிருந்தாலும், அமலாக்கத்துறை சி.பி.ஐ.யை விட சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளது. மகாராஷ்டிராவில் நீங்கள் பார்த்தது போல் அரசாங்கங்களை கவிழ்க்க அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அமலாக்கத்துறையால் அமைச்சரவையை அமைக்க முடியாது. இது மகாராஷ்டிராவின் சூழ்நிலையிலிருந்து தெளிவாகிறது. ஜனநாயகம் எங்கு செல்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.