காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்குமாறு சோனியா காந்தி சொன்னாரா?.. அசோக் கெலாட் விளக்கம்
காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுகொள்ளுமாறு சோனியா காந்தி என்னிடம் கூறியதாக ஊடகத்தில் வெளியான செய்தி மூலம் தெரிந்து கொண்டேன், இது பற்றி எனக்கு தெரியாது என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு தற்போது முழுநேர தலைவர் என்று யாரும் இல்லை. இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தி தனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு, தலைவர் பதவியில் தொடர்ந்து இருக்க முடியாது என்று தெளிவாக தெரிவித்து விட்டார். மேலும் ராகுல் காந்தியும் மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை. செப்டம்பர் 20ம் தேதிக்குள் காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில், சோனியா காந்தி கடந்த செவ்வாய்க்கிழமையன்று, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அசோக் கெலாட்டுடன் ரகசியமாக பேசியதாகவும், அப்போது அசோக் கெலாட்டிடம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கும்படி சோனியா காந்தி சொன்னதாகவும் ஊடகத்தில் செய்தி வெளியானது. ஆனால் இந்த தகவலை அசோக் கெலாட் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் ஊடகங்களிலிருந்து இருந்து இதை (சோனியா காந்தி தலைவர் பதவி ஏற்க சொன்னது) கேள்விப்படுகிறேன். இது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை நான் நிறைவேற்றுகிறேன் என தெரிவித்தார்.