காசி, மதுரா, குதுப்மினார் பிரச்சினைகளை எழுப்பும் அனைத்து ஜோக்கர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் உடன் நேரடி தொடர்பு உள்ளது.. ஓவைசி

 
நாட்டின் முக்கிய பிரச்சனை வேலைவாய்ப்பின்மைதான்….. மக்கள்தொகை அல்ல……ஆர்.எஸ்.எஸ்.தலைவருக்கு அசாதுதீன் ஓவைசி பதில்…

காசி, மதுரா மற்றும் குதுப்மினார் பிரச்சினைகளை எழுப்பும் அனைத்து ஜோக்கர்களுக்கும் சங்கத்துடன் (ஆர்.எஸ்.எஸ்.) நேரடி  தொடர்பு உள்ளது என அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பயிற்சி நிறைவு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதர் கோயில் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்பட வேண்டும். இந்து-முஸ்லிம் தரப்பினர் ஒன்றாக அமர்ந்து பிரச்சனையை சமரசமாக பேசி தீர்க்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்போதுள்ள இந்துக்களோ அல்லது முஸ்லிம்களோ இது போன்ற பிரச்சினைகளை உருவாக்கவில்லை. இந்த பிரச்சினைகள் முற்காலத்தில் உருவானவை. ஒவ்வொரு மசூதியிலும் சிவ லிங்கத்தை தேட வேண்டிய அவசியமில்லை. நாள்தோறும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்துவது தேவையற்றது என தெரிவித்தார்.

மோகன் பகவத்

ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.எ.ஸ். தலைவர் மோகன் பகவத்தின் கருத்து குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத் எந்தவொரு அரசியலமைப்பு பதவியிலும் இல்லை. ஞானவாபி மசூதி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 குறித்த பிரதமர் அலுவலகம் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து தெளிவான செய்தியை அளிக்கட்டும். ஞானவாபி பற்றிய மோகன் பகவத்தின் பேச்சை புறக்கணிக்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ். அரசியல் இரட்டை பேச்சை கச்சிதமாக செய்து விட்டது.

ஆர்.எஸ்.எஸ்.

காசி, மதுரா மற்றும் குதுப்மினார் பிரச்சினைகளை எழுப்பும் அனைத்து ஜோக்கர்களுக்கும் சங்கத்துடன் (ஆர்.எஸ்.எஸ்.) நேரடி  தொடர்பு உள்ளது. கோட்சேவையும் அவரது நண்பர் சாவர்க்கரையும் யாருக்காவது நினைவிருக்கிறதா? பாபர் மசூதி போராட்டத்தின் போது கூட சிலர் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவோம் என்றும் சிலர்  இது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றும் நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்றும் கூறினர். இவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.