புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்தது தவறு.. ஓவைசி குற்றச்சாட்டு
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்ன சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கக்கூடாது சபாநாயகர் தான் திறந்திருக்க வேண்டும் என அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். தேசிய சின்னம் திறப்புக்கு முன்னதாக நடைபெற்ற பூஜைகளிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்தது தவறு என்று அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார்.
ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி டிவிட்டரில், நாடாளுமன்றம், அரசாங்கம் மற்றும் நீதித்துறையின் அதிகாரங்களை அரசியலமைப்பு பிரித்து வைத்து இருக்கிறது. அரசாங்கத்தின் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல் தேசிய சின்னத்தை திறந்து வைத்திருக்கக் கூடாது. மக்களவை சபாநாயகர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வராத மக்களவையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்திய பிரதமர் அனைத்து அரசியலமைப்பு நெறிமுறைகளையும் மீறியுள்ளார் என பதிவு செய்துள்ளார்.
அசாம் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கூறுகையில், அரசியலின் ஷோமேன் ஆக பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். இது ஒரு கட்சி நிகழ்ச்சி அல்ல, முழு நாட்டிற்கும் சம்பந்தமான ஒன்று. எதிர்க்கட்சியை ஏன் அழைக்கவில்லை?. நிர்வாகம் பற்றிய பிரதமரின் அணுகுமுறை ஒரு ஆட்சியாளரின் அணுகுமுறையாகும். அவர் (மோடி) சர்வாதிகாரி போல் ஆட்சி செய்கிறார் என தெரிவித்தார்.