இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி அல்ல, அவுரங்கசீப் தான் காரணம்... அசாதுதீன் ஓவைசி கிண்டல்

 
அரசியலமைப்பில் மனிதர்களுக்குதான் உரிமை வழங்கப்பட்டுள்ளது பசுகளுக்கு அல்ல- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதிலடி

இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி அல்ல, அவுரங்கசீப் தான் காரணம் என்று அசாதுதீன் ஓவைசி கிண்டலடித்தார்.

அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் அசாதுதீன் ஓவைசி பேசிய வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளது. அந்த வீடியோவில், எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசை அசாதுதீன் ஓவைசி கிண்டலாக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பெட்ரோல் பம்ப்

அந்த வீடியோவில் அசாதுதீன் ஓவைசி கூறியிருப்பதாவது: இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி அல்ல, அவுரங்கசீப் தான் காரணம். உண்மையில் அவுரங்கசீப் தான் இதற்கெல்லாம் காரணம், பிரதமர் அல்ல. வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு பேரரசர் அக்பர்தான் காரணம். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு தாஜ்மஹாலை கட்டியவர் தான் காரணம். நாட்டில் இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.102க்கு விற்பனையாகிறது.

மோடி

அவர் தாஜ்மஹாலை கட்டாமல் இருந்திருந்தால், இன்று பெட்ரோல் ரூ.40க்கு விற்கப்பட்டிருக்கும். அந்த பணத்தை சேமித்து 2014ல் மோடியிடம் கொடுத்திருக்க வேண்டும். பா.ஜ.க. அரசு தனது குறைபாடுகளுக்கு முஸ்லிம்கள் மற்றும் முகலாயர்களை குற்றம் சாட்டுகிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள். நீங்கள் எத்தை முழக்கங்களை எழுப்பினாலும், நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டோம், நாங்கள் இங்கேயே இருப்போம், இங்கேயே இறப்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.