உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி போல் நடந்து கொள்கிறார்.. ஓவைசி குற்றச்சாட்டு

 
யோகி

பிரயாக்ராஜ் வன்முறை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஜாவேத் முகமதுவின் குடியிருப்பு இடிக்கப்பட்டதற்கு, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி போல் நடந்து கொள்கிறார் என அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டினார்.

நபிகள் நாயகம் குறித்த நுபுர் சர்மாவின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேசத்தின் பல்வேறு இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமையன்று போராட்டம் நடத்தினர். பிரயாக்ராஜ் நகரில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பிரயாக்ராஜ் வன்முறை தொடர்பாக முக்கிய குற்றவாளி ஜாவேத் முகமது உள்பட  60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

ஜாவேத் முகமதுவின் குடியிருப்பை புல்டோசர் மூலம் இடிக்க தொடங்கிய நிர்வாகம்

இந்நிலையில், நேற்று முன்தினம் பிரயாக்ராஜ் வன்முறையில் முக்கிய குற்றவாளி ஜாவேத் முகமதுவின் 2 மாடி குடியிருப்பை மாவட்ட நிர்வாகம் மற்றும் அந்நகர மேம்பாட்டு ஆணையம் இடித்தது. 5 மணி நேரத்தில் அந்த குடியிருப்பு தரைமட்டமாகப்பட்டது. ஜாவேத் முகமது அந்த குடியிருப்பை குடியிருப்பை விதிமுறைக்கு புறம்பாக கட்டியிருந்ததால் இடிக்கப்பட்டதாக பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது. ஜாவேத் முகமதுவின் குடியிருப்பு இடிக்கப்பட்டதற்கு அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

அசாதுதீன் ஓவைசி

குஜராத் மாநிலம் கட்ச் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அசாதுதீன் ஓவைசி பேசுகையில் கூறியதாவது: உத்தர பிரதேச முதல்வர் (யோகி ஆதித்யநாத்) அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகி விட்டார். அவர் யாரையாவது குற்றவாளியாக்கி அவர்களின் வீடுகளை இடிப்பாரா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.