நாங்கள் பொய் சொல்கிறோமா என்று உங்கள் நண்பர் அப்பாஸிடம் கேளுங்க.. பிரதமர் மோடியை வலியுறுத்திய அசாதுதீன் ஒவைசி

 
அசாதுதீன் ஓவைசி

நாங்கள் பொய் சொல்கிறோமா என்று உங்கள் நண்பர் அப்பாஸிடம் கேளுங்க என பிரதமர் மோடியிடம் அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது தாயார் ஹீரோபென் மோடியின் 99வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் எழுதிய வலைப்பதிவு இடுகையில் (ப்ளாக்), எனது தந்தையின் நண்பர் ஒருவர் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தார்.  அவரது அகால மரணத்துக்கு பிறகு எனது தந்தை தனது நண்பரின் மகனை (அப்பாஸ்) அழைத்து வந்தார்.  அப்பாஸ் எங்கள் வீட்டில் எங்களோடு தங்கி பள்ளிப் படிப்பை முடித்தார். அம்மா அப்பாஸ் மீது அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார். எங்கள் எல்லா உடன்பிறந்தவர்களையும் போலவே அப்பாஸ் மீது அக்கறையும் இருந்து. ஒவ்வொரு ஆண்டும் ஈத் அன்று, அப்பாஸூக்கு பிடித்த உணவுகளை தயாரிப்பார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனது பால்ய நண்பர் அப்பாஸை நினைவு கூர்ந்ததை ஹைதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: எட்டு ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் தனது நண்பரை நினைவு கூர்ந்தார். உங்களுக்கு இந்த நண்பர் இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது. நாங்கள் பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். தயவு செய்து அப்பாஸ் இருந்தால் அவரிடம் அசாதுதீன் ஓவைசி மற்றும் உலமாக்கள் (மத தலைவர்கள்) உரைகளை கேட்கும்படி சொல்லுங்கள். 

நுபுர் சர்மா

நாங்கள் பொய் சொல்கிறோமா என்று அவரிடம் கேளுங்கள். நீங்கள் அப்பாஸ் முகவரி பகிர்ந்து கொண்டால்,நான் அப்பாஸை பார்க்க செல்வேன். நபிகள் நாயகத்தை பற்றி நுபுர் சர்மா கூறியது ஆட்சேபனைக்குரியதா இல்லையா என்று நான் அவரிடம் (அப்பாஸ்) கேட்பேன். அவள் (நுபுர் சர்மா) குப்பையாக பேசினாள் என்பதை அவர் (அப்பாஸ்) ஒப்புக்கொள்வார். நீங்கள் உங்கள் நண்பரை நினைவு கூர்ந்தீர்கள், இது ஒரு கதையாக இருக்கலாம். எனக்கு எப்படி தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.