ஓபிஎஸ் மாஜி முதல்வர் என்பதால்... இபிஎஸ் அதிர்ச்சி!
ஓ .பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர் என்பதால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பினை திரும்ப பெற வேண்டுமென்று உத்தரவிட முடியாது என்று சொல்லி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். திரும்ப பெற உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. இதனால் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ்-க்கு எதிராக ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஓ. பன்னீர்செல்வம் மூன்று முறை தமிழ்நாடு முதலமைச்சர் ஆக பதவி வகித்துள்ளார். அதன் பின்னர் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக கடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது. அப்போது ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் வந்து கலவரத்தில் ஈடுபட்டார். அவருக்கு அரசு வழங்கியிருக்கும் போலீஸ் பாதுகாப்புடன் இந்த கலவரத்தில் அவர் ஈடுபட்டார். அதனால் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
மேலும், மத்திய அரசு ஓபிஎஸ்-க்கு வழங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பு கடந்த 2020 ஆம் ஆண்டில் வாபஸ் பெற்றிருக்கிறது. அதனால் ஓபிஎஸ்க்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாததால் போலீஸ் பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்துவதால், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
நீதிபதி இளந்திரையன் முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முன்னாள் முதல்வர் என்கின்ற அடிப்படையில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பினை திரும்ப பெற உத்தர உத்தரவிட முடியாது என்று சொன்ன நீதிபதி, திரும்ப பெற உத்தரவிடக் கூறிய வழக்கை தள்ளுபடி செய்தார்.