பால் தாக்கரே இறந்த பிறகு சிவ சேனாவை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க. அதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டது.. அரவிந்த் சாவந்த்

 
அரவிந்த் சாவந்த்

பால் தாக்கரே இறந்த பிறகு உத்தவ் தாக்கரேவை சாதாரணமாக எடுத்துக்கொண்டார்கள், சிவ சேனாவை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க. இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டது என சிவ சேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவ சேனாவின் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடான கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் இல்லையென்றால் சிவ சேனா உடையும் என உத்தவ் தாக்கரேவை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் மகாராஷ்டிரா அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை சிவ சேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாங்கள் அதிகாரத்தின் மீது பேராசை கொண்டவர்கள் அல்ல. நாங்கள் லட்சியவாதிகள். கிளர்ச்சியாளர்கள் (சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள்) மீது உரிய விசாரணை நடத்தப்படும். 

பால் தாக்கரே

மத்திய பிரதேசத்தில் நடந்ததை (காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு) ஒட்டுமொத்த தேசமும் பார்த்தது. இந்த படுதோல்வி இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்று தெரியவில்லை. சிவ சேனா உணர்ச்சிவசப்பட்ட கட்சி, நாங்கள் போராடுவோம். இறுதிவரை போராடுவோம். கடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு 50-50 பகிர்வு (இரண்டரை ஆண்டுகள் ஆட்சி) பார்முலாவுக்கு பா.ஜ.க.வுடன் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் ஆறு மாதங்களுக்கு பிறகு கொங்கனில் அமித் ஷா இந்த பார்முலாவை மறுத்தார். சிவ சேனாவுடான கூட்டணியை பா.ஜ.க. முறித்தது. 

பா.ஜ.க.

பாலாசாகேப் மரணத்துக்கு பிறகு, உத்தவ் தாக்கரேவை பா.ஜ.க. சாதாரணமாக எடுத்து கொண்டது. சிவ சேனாவை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க. இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டது. 2014 தேர்தலின் போது சிவ சேனாவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் வந்தது. கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் உத்தவ் தாக்கரே தலைமையிலான முகாமுக்கு அழைப்பு விடுத்தனர் மற்றும் தாங்கள் திரும்பி வர விரும்புவதாகவும் தெரிவித்தனர். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் இருக்கும்போது சிலர் ஆட்சிக்கு வருவதை பற்றி கவலைப்படுவது மகாராஷ்டிராவின் துரதிர்ஷ்டம். சிவ சேனாவின் தலைவர் இல்லாமல் அவர்களால் (கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள்) இருக்க முடியாது, யாரும் அவர்களிடம் கேட்க மாட்டர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.