காஷ்மீர் பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுங்க.. கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில்  கடந்த சில நாட்களாக காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் அரசு பணியாளர்களை  குறிவைத்து  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 2012ல் பிரதமரின் தொகுப்பின் கீழ் வேலை வழங்கப்பட்ட  பல காஷ்மீர் பண்டிட்டுகள், ராகுல் பட் கொல்லப்பட்டதில் இருந்து பாதுகாப்பு கோரி பள்ளத்தாக்கில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.

காஷ்மீர் பண்டிட்டுகள் ஆர்ப்பாட்டம்

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக கூறியதாவது: காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையால் நாடு கவலை அடைந்துள்ளது. தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் (காஷ்மீர் பண்டிட்டுகள்) நீண்ட காலத்துக்கு பிறகு நம்பிக்கையுடன் (பள்ளத்தாக்கு) திரும்பி சென்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரியங்கா சதுர்வேதி

காஷ்மீர் பண்டிட்டுகள் விவகாரம் தொடர்பாக சிவ சேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், காஷ்மீரின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு காஷ்மீரில் உள்ள இந்து சமூகத்தினருக்கு தகுந்த பாதுகாப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, சமீபத்தில் நடந்த கொலைகளை குறித்து திறமையான அதிகாரி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.