பா.ஜ.க. பணக்காரர்களின் கட்சி.. கொள்ளையடிக்கவே பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறது.. அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

 
அரவிந்த் கெஜ்ரிவால்

பா.ஜ.க. பணக்காரர்களின் கட்சி, கொள்ளையடிக்கவே பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறது என குஜராத் மக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

குஜராத் மாநிலம் ராஜகோட்டில் நேற்று ஆம் ஆத்மி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க. பணக்காரர்களின் கட்சி. பணக்காரர்களுக்காக பெரிய செலவில் உயர்ந்த பள்ளிகள் கட்டப்படும். 27 ஆண்டுகளில் பா.ஜ.க. ஏழை மற்றும் நடுத்தர குழந்தைகளுக்காக எத்தனை பள்ளிகளை கட்டியது என்று சி.ஆர்.பாட்டீலிடம் (குஜராத் பா.ஜ.க. தலைவர்) கேட்க விரும்புகிறேன்?. 

பா.ஜ.க.

ஏழை குழந்தைகளின் 6 ஆயிரம் அரசு பள்ளிகளை பா.ஜ.க. மூடியது. டெல்லியில் உள்ள எனது அரசு 5 ஆண்டுகளில் அரசு பள்ளிகளை சரி செய்து ஏழை குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அளித்துள்ளது. டெல்லியில் உள்ள அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களில் 450 பேர் ஐஐடியில் சேர்க்கை பெற்றுள்ளனர். குஜராத்தில் 27 வருடங்களாக பா்.ஜ.க. பள்ளிகளை ஏன் சரி செய்யவில்லை? கொள்ளையடிக்கவே பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறது. பா.ஜ.க. தலைவர்கள் ஊழல் செய்வதால், பா.ஜ.க. இலவச மின்சாரம் கொடுக்காது. 

வீடுகளுக்கு இலவச மின்சாரம்

இலவச மின்சாரம் வேண்டுமானால் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள். 24 மணி நேரமும் நாங்கள் உங்களுக்கு இலவச மின்சாரம் தருவோம். டெல்லியை போல் மூத்த குடிமக்களுக்கும் இலவச புனித யாத்திரை வழங்கப்படும். காங்கிரஸின் மிகப்பெரிய தலைவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைய உள்ளார். ஆனால் பா.ஜ.க. அவரை அழைத்து, நீங்கள் காங்கிரஸில் இருங்கள், காங்கிரஸ் எங்கள் இளைய தங்கை என்று கூறியுள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகும் குஜராத்தில் உள்ள அரசு பள்ளிகள் மோசமான நிலையில் இருப்பது ஏன்? ஏன் அனைத்து தாள்களும் கசிகின்றன? குஜராத் இளைஞர்களுக்கு அரசு எப்போது வேலை வாய்ப்பை கொடுக்கும்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.