ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், அனைத்து குஜராத்திகளுக்கும் இலவச மற்றும் சிறந்த மருத்துவ சிகிச்சை.. கெஜ்ரிவால் வாக்குறுதி

 
மொஹல்லா கிளினிக்

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் அனைத்து குஜராத்திகளுக்கும் இலவச மற்றும் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார்.

இன்னும் சில மாதங்களில் தேர்தலை சந்திக்க உள்ள குஜராத்துக்கு 2 நாள் பயணமாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவும் சென்றனர். நேற்று அங்கு கூட்டம் ஒன்றில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியின் ஆணவத்தின் சுமையை குஜராத் மக்கள் சுமந்து வருவதால் அவர்கள் (மக்கள்) சோகமாக இருக்கின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து குஜராத்திகளுக்கும் இலவச மற்றும் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். மொஹல்லா கிளினிக்குகளை போலவே, நகரங்களிலும் கிராமங்களிலும் சுகாதார கிளினிக்குகள் திறக்கப்படும். நாங்கள் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவோம் மற்றும் தேவைப்பட்டால் புதிய அரசு மருத்துவமனைகள் திறக்கப்படும். நாங்கள் சுகாதாரத்தை மலிவானதாகவும், அணுகக் கூடியதாகவும் மாற்றுவோம்.

ஆம் ஆத்மி

டெல்லியின் கல்வி முறையை பாராட்டி நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது. குஜராத் மாணவர்கள் தரமான கல்வியை பெற ஆம் ஆத்மி கட்சி உதவும். எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில்  ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்குமாறு பயணிகளிடம் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.