இன்னும் ஒரு மாநிலம்தான்.. ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக அறிவிக்கப்படும்- அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

இன்னும் ஒரு மாநிலத்தில் மாநில கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்து விட்டால் ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சியாக அறிவிக்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கோவாவில் ஆம் ஆத்மி கட்சியை மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் ஒரு மாநிலத்தில் மாநில கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்து விட்டால் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக மாறி விடும் என்று தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், கோவாவில் ஆம் ஆத்மி கட்சி மாநில அங்கீகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ஷேர் செய்து இருந்தார்.

தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம்

மேலும், அந்த டிவிட்டில், டெல்லி மற்றும் பஞ்சாபை தொடர்ந்து, ஆம் ஆத்மி இப்போது கோவாவிலும் மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளது. இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகாரம் கிடைத்தால் அதிகாரப்பூர்வமாக தேசிய கட்சியாக அறிவிக்கப்படுவோம். ஒவ்வொரு தன்னார்வ தொண்டரின் கடின உழைப்பிற்காக நான் வாழ்த்துகிறேன். ஆம் ஆத்மி சித்தாந்தத்தில் நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன் என பதிவு செய்துள்ளார்.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சி தற்போது எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து அங்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்துக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு ஆம் ஆத்மிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்தி வருகிறார். குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி முத்திரை பதித்து விட்டால் அந்த கட்சிக்கு எளிதாக தேசிய அங்கீகாரம் கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.