உங்க கட்சியிலேயே இருங்க ஆனால் ஆம் ஆத்மிக்கு வேலை செய்யுங்க.. குஜராத் பா.ஜ.க. தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

உங்க கட்சியிலேயே இருங்க ஆனால் ஆம் ஆத்மிக்கு வேலை செய்யுங்கள என்று குஜராத் பா.ஜ.க. தொண்டர்களிடம் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமும், பா.ஜக.வின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி தடம் பதிக்க விரும்புகிறது. இதற்காக அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி அந்த மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாள் பயணமாக குஜராத் சென்றார். அவரது 2 நாள் பயணத்தின் கடைசி நாளான நேற்று ராஜ்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: எங்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள்  வேண்டாம். பா.ஜ.க. தனது தலைவர்களை வைத்துக் கொள்ளலாம். 

பா.ஜ.க.

கிராமங்கள், சாவடிகள் மற்றும் தாலுகாக்களில் உள்ள பா.ஜ.க.வின் பன்னா முக்கிய தொண்டர்கள் எங்களுடன் திரளாக இணைந்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு பிறகும் கட்சியில் அவர்கள் செய்த சேவைக்கு ஈடாக பா.ஜ.க. என்ன கொடுத்தது என்று அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்?. நீங்கள் (பா.ஜ.க. தொண்டர்கள்) அந்த கட்சியில் இருக்கலாம் ஆனால் ஆம் ஆத்மிக்கு வேலை செய்யலாம். அவர்களில் (பா.ஜ.க. தொண்டர்கள்) பலர் ஊதியம் பெறுகிறார்கள், எனவே அங்கிருந்து பணம் பெற்றுக் கொள்ளுங்கள் ஆனால் எங்களுக்கு வேலை செய்யுங்கள், ஏனென்றால் எங்களிடம் பணம் இல்லை. பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மற்றும் தரமான கல்வி, மருத்துவம் மற்றும் இலவச மின்சாரத்தை பா.ஜ.க. வழங்கவில்லை. 

வீடுகளுக்கு இலவச மின்சாரம்

நாங்கள் ஆட்சி அமைக்கும் போது இலவச மின்சாரம் வழங்குவோம். இது உங்கள் வீடுகளுக்கும் பொருந்தும். நாங்கள் உங்களுக்கு 24 மணி நேர மின்சாரம் வழங்குவோம். உங்கள் குழந்தைகளுக்கு இலவச கல்வி கிடைக்கும் நல்ல பள்ளிகளை உருவாக்குவோம். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச மற்றும் தரமான சிகிச்சையை உறுதி செய்து, உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும். அனைத்து பா.ஜ.க.வினரையும் அங்கேயே இருங்கள், ஆனால் ஆம் ஆத்மிக்கு வேலை செய்யுங்கள் என்று நான் கூற விரும்புகிறேன். நீங்கள் புத்திசாலி, உள்ளிருந்து (பா.ஜ.க.விலிருந்து) ஆம் ஆத்மி கட்சிக்காக உழைக்கிறீர்கள். 27 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு மீண்டும் பா.ஜ.க.வின் வெற்றியை உறுதி செய்வதால் எந்த பயனும் இல்லை.