மோடி அரசு மக்கள் மீது வரிகளை குவித்து வருகிறது ஆனால் பணக்காரர்களுக்கு அதை தள்ளுபடி செய்கிறது... கெஜ்ரிவால்

 
வரி

பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்கள் மீது வரிகளை குவித்து வருகிறது. ஆனால் பணக்காரர்களுக்கு அதை (வரி) தள்ளுபடி செய்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி என எந்த மாதிரியான தேர்தல் வந்தாலும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவர இலவசங்கள் அளிப்பதாக வாக்குறுதி அளிப்பது வாடிக்கையாக உள்ளது. இலவசங்கள் வழங்குவது  அரசின் நிதி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சமீபகாலமாக இலவசங்களுக்கு எதிராக குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன. தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடைக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் கெஜ்ரிவால்

இலவசங்கள் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய பா.ஜ.க. அரசு ஆதரவு அளித்துள்ளது. அதேசமயம் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் இலவசங்கள் வழங்குவது தவறில்லை என்று தெரிவித்தன. இதனால் இலவசங்கள் விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இந்த விவகாரத்தில் மத்திய அரசு தாக்கியுள்ளது. டெல்லி முதல்வராக ஈரக்கும் தலைவர்கள் வாக்காளர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க அடிக்கடி பயன்படுத்தும் முறை இது (இலவசங்கள்) என்று மத்திய அரசு குற்றம் சாட்டியது.

அக்னிபாத் திட்டம்

மத்திய பா.ஜ.க. அரசின் குற்றச்சாட்டுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மக்கள் மீது வரிகளை குவித்து வருகிறது. ஆனால் பணக்காரர்களுக்கு அதை (வரி) தள்ளுபடி செய்கிறது. ஓய்வூதியத்திற்கு பணம் இல்லை என்று கூறி அக்னிபாத் திட்டத்தை கொண்டு வந்தனர். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ராணுவ வீரர்களுக்கு  ஓய்வூதியம் வழங்கக்கூட பணமில்லாமல் தவிக்கும் நிலை இதுவரை நடந்ததில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.