சத்யேந்தர் ஜெயின் வீடியோ விவகாரம்.. பா.ஜ.க. வீடியோ தயாரிக்கும் நிறுவனமாக மாறிவிட்டது.. கெஜ்ரிவால் விமர்சனம்

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

சத்யேந்தர் ஜெயின் வீடியோக்களை குறிப்பிட்டு, பா.ஜ.க. வீடியோ தயாரிக்கும் நிறுவனமான மாறிவிட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்தார்.

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பணமோசடி குற்றச்சாட்டு காரணமாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று கடந்த 19ம் தேதி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நவம்பர் 23ம் தேதியன்று வெளியான வீடியோவில்,  சிறைக்குள் பல உணவு வகைகள், பழங்கள் மற்றும் சூப் போன்றவை வரவழைத்து சத்யேந்தர் ஜெயின் சாப்பிடும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. மேலும், சிறைக்குள் விருந்தினர்களை சந்தித்து பேசும் காட்சி அடங்கிய வீடியோ கடந்த சனிக்கிழமை வெளியானது. 

சிறை அறையில் விருந்தினர்களை சந்தித்து பேசிய சத்யேந்தர் ஜெயின்

இந்நிலையில், நேற்று சத்யேந்தர் ஜெயின் தங்கியிருக்கும் அறையை இருவர் சுத்தம் செய்யும் காட்சி அடங்கிய வீடியோ வெளியானது. இந்த வீடியோ சத்யேந்தர் ஜெயின் எந்தவித பிரச்சினையும் இன்றி சொகுசாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. சத்யேந்தர் ஜெயின் தொடர்பான வீடியோக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இந்த வீடியோக்கள் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் கூறுகையில், பா.ஜ.க. ஒரு வீடியோ தயாரிக்கும் நிறுவனம் என்று பதில் அளித்துள்ளார்.

பா.ஜ.க.

அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று குஜராத் மாநிலம் சூரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது சத்யேந்தர் ஜெயின் தொடர்பான நேற்று முன்தினம் வெளியான லேட்டஸ்ட் வீடியோ குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளிக்கையில் கூறியதாவது: ஒவ்வொரு வார்டிலும் வீடியோ கடைகளை திறப்போம் என்று டெல்லியில் பா.ஜ.க. உத்தரவாதம் அளித்துள்ளது.  தங்கள் குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்து ஆட்சிய சிறப்பாக நடத்தும் கட்சி வேண்டுமா அல்லது வீடியோ தயாரிக்கும் நிறுவனம் வேண்டுமா என்பதை டெல்லி மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.