மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகரை நட்சத்திர பேச்சாளராக்கினால் பா.ஜ.க. கூட்டங்களுக்கு கூட்டம் வரும்.. கெஜ்ரிவால் கிண்டல்

 
இரட்டை இலை சின்ன மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரின் காதலி கைது!

மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகரை பா.ஜ.க. நட்சத்திர பேச்சாளராக்கினால் குறைந்தபட்சம் அந்த கட்சி கூட்டங்களுக்கு கூட்டம்  வரும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டலடித்தார்.

பணமோசடி வழக்கில் டெல்லி திஹார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் அண்மையில் டெல்லி துணைநிலை கவர்னருக்கு எழுதிய கடிதம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் அண்மையில் சுகேஷ் சந்திரசேகர் எழுதிய  கடிதத்தில், ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.500  கோடி வசூலிக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டதாகவும், சத்யேந்தர் ஜெயின் தன்னை மிரட்டியதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகர் ஊடகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில்,  அமெரிக்க செய்திகளில் டெல்லி பள்ளி மாதிரி கதையை விளம்பரப்படுத்துவதற்காக பி.ஆருக்கு 8.5 லட்சம் டாலர் மற்றும் 15 சதவீதம் கூடுதல் வழங்கப்பட்டது என்று தெரிவித்து இருந்தார். இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகர் எந்தநேரமும் பா.ஜ.க.வில் இணையலாம் என்று தெரிவித்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:  சுகேஷ் சந்திரசேகர் பா.ஜ.க.வின் மொழியை பேசக் கற்றுக் கொண்டிருக்கிறார். பா.ஜ.க. கூட கெஜ்ரிவாலுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று கூறியது. தற்போது பா.ஜ.க.வில் சேர சுகேஷ் சந்திரசேகர் பயிற்சி பெற்று வருகிறார். 

பா.ஜ.க.

இனி எந்த நாளிலும் அவர் பா.ஜ.க.வில் இணைவார். சுகேஷ் சந்திரசேகரை நட்சத்திர பேச்சாளராக ஆக்க வேண்டும். அவரின் கதையை கேட்க, அவரை பார்க்காவது குறைந்தபட்சம் மக்கள் கூட்டங்களுக்கு வருவார்கள். அதன் பிறகு குறைந்தபட்சம் பா.ஜ.க. கூட்டங்களின்போது கூட்டம் இருக்கும். பா.ஜ.க. அவரை (சுகேஷ் சந்திரசேகர்) கட்சியில் சேர்த்து தலைவராக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.