ஒரு வாரத்துக்குள் குஜராத் சட்டப்பேரவையை கலைக்க பா.ஜ.க. திட்டம்... அரவிந்த் கெஜ்ரிவால் பகீர் தகவல்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

ஒரு வாரத்துக்குள் குஜராத் சட்டப்பேரவையை கலைக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.

குஜராம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த இரண்ஈடு மாநிலங்களுக்கும் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் குஜராத் முதல்வர் மற்றும் தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பா.ஜ.க. மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல், மாநில சட்ட அமைச்சர் ராஜேந்திர திரிவேதி, குஜராத் தலைமை செயலாளர் கைலாஷ் நாதன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி

பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றிய தெம்பில், எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி களமிறங்கும் நோக்கில் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தலை முன்கூட்டியை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேதிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக டிவிட்டரில், தொடர்ச்சியான டிவிட்டுகளில்,  குஜராத் சட்டப்பேரவையை கலைத்துவிட்டு குஜராத் தேர்தலை அடுத்த வாரம் பா.ஜ.க. அறிவிக்க போகிறதா? பா.ஜ.க. தனது கட்சியை கண்டு மிகவும் பயப்படுகிறதா என்ற ஆச்சரியப்படுகிறேன், அது (பா.ஜ.க.) திட்டமிட்டதற்கு முன்பே மாநிலத்தில் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார்.

பா.ஜ.க.

குஜராத் மாநிலம் சூரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸூக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நட்புரீதியான போட்டிகள் நடந்தன. இப்போது ஆம் ஆத்மி வந்து விட்டது. ஆம் ஆத்மிக்கு அதிக நேரம் கிடைக்காமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். எனவே அவர்கள் முன்கூட்டியே தேர்தலை சந்திக்கும் மனநிலையில் உள்ளனர். அவர்கள் 7 முதல் 10 நாட்களுக்குள் சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை அறிவிக்கக்கூடும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன என தெரிவித்தார்.