பஞ்சாபில் நேர்மையான அரசு உள்ளது, 3 மாதங்களில் முந்தைய அரசாங்கங்கள் சாதிக்க முடியாத பணிகள் சாதிப்பு.. கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாபில் இப்போது நேர்மையான அரசு உள்ளது. கடந்த 3 மாதங்களில் முந்தைய அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்த ஆண்டுகளில் சாதிக்க முடியாத பணிகளை இந்த பஞ்சாப் அரசு சாதித்துள்ளது என கெஜ்ரிவால் தெரிவித்தார்.

பஞ்சாபில் அண்மையில் நடந்து முடிந்த அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி முதல் முறையாக அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அம்மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை குறிப்பிட்டு ஆம் ஆத்மி அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.

பகவந்த் மான்

பஞ்சாப் ஜலந்திரில் இருந்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு சொகுசு பேருந்து சேவையை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: நான் எதிர்க்கட்சிகளிடம் கேட்கிறேன், மான் சாஹிப் தன்னுடன் குண்டர்களை அழைத்து வந்தாரா? இந்த கும்பல் கடந்த அரசாங்கத்தில் பிறந்தவர்கள். குண்டர்கள் மற்றும் தேச விரோத சக்திகளை யாராலும் பாதுகாக்க முடியாது.

ஆம் ஆத்மி

பாட்டியாலா மோதல் குற்றவாளி 24 மணி நேரத்தில் பிடிபட்டார். ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பஞ்சாபில் இப்போது நேர்மையான அரசு உள்ளது. கடந்த 3 மாதங்களில் முந்தைய அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்த ஆண்டுகளில் சாதிக்க முடியாத பணிகளை இந்த பஞ்சாப் அரசு சாதித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.