ஆம் ஆத்மி கட்சிக்கு பகவான் கிருஷ்ணர் மற்றும் தேவி ஆசீர்வாதம் உள்ளது... அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

ஆம் ஆத்மி கட்சிக்கு பகவான் கிருஷ்ணர் மற்றும் தேவி ஆசிர்வாதம் உள்ளது என்று அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

குஜராத்தில் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள கம்பாலியா சட்டப்பேரவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல்  பிரச்சார கூட்டத்தில், அந்த தொகுதியில்  போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளரும், அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளருமான இசுதன் காத்வியை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றுகையில் கூறியதாவது: குஜராத் மக்களுக்கு முன் இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று இசுதன் காத்வி மற்றொன்று பூபேந்திர படேல். யாருக்கு ஓட்டு போடுவீர்கள், யாரை முதல்வராக்குவீர்கள்?. இசுதன் காத்வி இளைஞர், படித்த மனிதர், ஏழைகளுக்காக துடிக்கும் இதயம் கொண்டவர் மற்றும் விவசாயின் மகன். அவர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது, விவசாயிகள் பிரச்சினைகளை எழுப்பியவர், சத்தமில்லாத விவாதங்களில் ஈடுபடவில்லை. 

இசுதன் காத்வி

இசுதன் காத்வி விவசாயிகளுக்காக உழைத்தவர், விவசாயிகள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். மறுபுறம் பூபேந்திர படேல் இருக்கிறார். அவருக்கு அதிகாரம் இல்லை, அவர் ஒரு கைப்பாவை முதல்வர். அவரால் தனது பியூனைக்கூட மாற்றி முடியாது. அவர் நல்லவர், கெட்டவர் இல்லை. அவர் மிகவும் மதவாதி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் யாரும் அவர் பேச்சை கேட்பதில்லை. அவர் ஒரு கைப்பாவை முதல்வர். உங்களுக்கு கைப்பாவை முதல்வர் வேண்டுமா அல்லது படித்த முதல்வர் வேண்டுமா?. கம்பாலியா மக்கள் அவரது (அமித் ஷா) கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, இன்று ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்துள்ளனர். அவர்கள் தங்கள் மகன் இசுதானை குஜராத்தின் முதல்வராக ஆக்குவதற்காக வந்துள்ளனர். 

பா.ஜ.க.

முன்பு பா.ஜ.க.வை தூக்கி எறிய நினைத்தாலும் மக்களுக்கு வேறு வழியில்லை, ஆளும் கட்சியுடன் காங்கிரஸூம் உள்ளே இருந்தே கூட்டணி வைத்துள்ளது. குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவான அலை உள்ளது. இது எப்படி நடந்தது என்று நான் ஆச்சரியப்படுகிறேன். பின்னர் நான் கண்களே மூடிக்கொண்டு  என் கைகளை ஒன்றாக இணைத்து, இது ஏதோ தெய்வீக சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தேன். ஆம் ஆத்மி கட்சிக்கு பகவான் கிருஷ்ணர் மற்றும் தேவி ஆசீர்வாதம் உள்ளது. பாவ பாத்திரம் நிரம்பிய போதெல்லாம், கடவுள் தனது துடைப்பத்தால் துடைப்பார் என்று கீதையில் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.