டெல்லியின் குடிசை காலனிகளையும், சேரிகளையும் தகர்க்க பா.ஜ.க. திட்டம்... அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

 
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியின் குடிசை காலனிகளையும், சேரிகளையும் தகர்க்க பா.ஜ.க. திட்டமிட்டு வருகிறது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

டெல்லி யூனியன் பிரதேதச்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அதேசமயம் டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளின் பா.ஜ.க.வின் நிர்வாகம் உள்ளது. இந்நிலையில், டெல்லி மாநகராட்சி பகுதிகளில், சட்டவிரோத மற்றும் ஆக்கிரமிப்பு கட்டங்களை புல்டோசர்களை பயன்படுத்தி மாநகராட்சி நிர்வாகம் இடித்து வருகிறது. இதற்கு ஆளும் கட்சியான ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

புல்டோசர் மூலம் சட்டவிரோத கட்டிடங்கள இடிப்பு

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊடகங்களிடம் பேசுகையில் கூறியதாவது: டெல்லியில் ஆக்கிரமிப்புக்கு எதிராக மாநகராட்சியால் புல்டோசர்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் 2 விஷயங்கள் முக்கியம். ஒன்று, டெல்லியின் 80 சதவீதம் ஆக்கிரமிப்பின் கீழ் வரும். இரண்டாவதாக, மக்கள் தங்கள் ஆவணங்களை காட்டிய பிறகும் புல்டோசர்கள் மூலம் கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன. இது சரியல்ல. இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு.

பா.ஜ.க.

அவர்கள் (பா.ஜ.க.) டெல்லியின் குடிசை காலனிகளையும், சேரிகளையும் தகர்க்க திட்டமிட்டு வருகின்றனர். 63 லட்சம் மக்களின் வீடுகள் அல்லது கடைகள் புல்டோசர்களால் அழிக்கப்படலாம். குடிசைப் பகுதிகளில் உள்ள இடங்களில் வீடுகள் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் அதற்கு பதிலாக புல்டோசர்களை கொண்டு வந்தது. பா.ஜ.க. மாநகராட்சியை 15 ஆண்டுகள் ஆட்சி செய்து சட்டவிரோத கட்டிடங்களை கட்டியது. இப்போது மாநகராட்சி தனது பதவி காலத்தை மே 18ம் தேதி நிறைவு செய்யும், இது நெறிமுறையாக இருக்குமா. இவ்வாறு அவர் தெரிவித்தார்.