சத்யேந்தர் ஜெயின் மீதான அமலாக்கத்துறை வழக்கு பொய்யானது.. அரசியல் காரணங்களுக்காக பதிவு.. அரவிந்த் கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

சத்யேந்தர் ஜெயின் மீதான அமலாக்கத்துறை வழக்கு பொய்யானது, அரசியல் காரணங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடந்த 2015-16 ஆண்டுகளில் அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் பதியப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெயரளவில் செயல்படும் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.4.81 கோடி பணப் பரிமாற்றம் நடைபெற்றது. அந்த பணம் கொல்கத்தாவில் உள்ள ஹவாலா முகவர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, டெல்லிக்கு அருகே விவசாய நிலங்கள் வாங்கப்பட்டது, வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க பயன்படுத்தப்பட்டது என்று குற்றம் சாட்டி சி.பி.ஐ. 2017ல் வழக்கு பதிவு செய்தது. 

சத்யேந்தர் ஜெயின்

இந்நிலையில் பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கு தொடர்பாக கடந்த திங்கட்கிழமையன்று சத்யேந்தர் ஜெயினிடம் அமலாக்கத்துறையினர் சில மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அமலாக்கத்துறையினரின் கேள்விக்கு சத்யேந்தர் ஜெயின் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அன்று இரவு சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் தனது அமைச்சருக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குரல் கொடுத்துள்ளார். சத்யேந்தர் ஜெயின் கைது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: சத்யேந்தர் ஜெயின் மீதனா வழக்கை தனிப்பட்ட முறையில் நான் ஆய்வு செய்தேன், மத்திய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த வழக்கு பொய்யானது என்பதை கண்டறிந்தேன்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா

எனது அரசாங்கத்தில் ஊழலை சகித்துக் கொள்ள முடியாது. அரசியல் காரணங்களுக்காக ஜெயின் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. எங்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. ஜெயின் உண்மையின் பாதையில் செல்கிறார், அவர் சுத்தமாக வெளியே வருவார். இவ்வாறு அவர் தெரிவித்தார். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், சத்யேந்தர் ஜெயின் இமாச்சல பிரதேச தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளராக இருப்பதால் 8 ஆண்டு கால போலி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார். சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்ததையடுத்து, அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என காங்கிரஸூம், பா.ஜ.க.வும் வலியுறுத்தியுள்ளன.