நாட்டு மக்களை தடுக்கும் அளவுக்கு தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.. பா.ஜ.க.வை தாக்கிய கெஜ்ரிவால்

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

இந்த நாட்டு மக்களை தடுக்கும் அளவுக்கு தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று பா.ஜ.க.வை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கினார்.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கம் கடந்த ஆண்டு  டெல்லியில் உள்ள குடிமக்களுக்கு யோகா பயிற்சியாளர்களை இலவசமாக வழங்கும் டெல்லி கி யோகாஷாலா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்கீழ், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுடன் கிட்டத்தட்ட 590 யோகா வகுப்புகள் தேசிய தலைநகரம் முழுவதும் தினசரி அடிப்படையில் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், இந்த திட்டத்தை இந்த ஆண்டும் தொடர டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா அனுமதி கொடுக்காததால் நவம்பர் 1ம் தேதி முதல் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வினய் குமார் சக்சேனா

மேலும், இந்த திட்டத்தை தொடரக்கோரி ஆம் ஆத்மி அரசு எந்த கோப்புகளையும் கவர்னருக்கு அனுப்பவில்லை. துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மட்டும் இந்த திட்டத்தை தொடரக்கோரி கவர்னருக்கு கடிதம் எழுதினார். ஒரு கடிதத்தை ஒரு முன்மொழிவாக நாம் எவ்வாறு கருதுவது என அதிகாரிகள் கேட்டனர். இந்நிலையில் நேற்று டெல்லி கி யோகாஷாலா நிறுத்தப்பட்டது. இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: கடந்த ஆண்டு டெல்லியின் யோகாசாலா திட்டத்தை தொடங்கினோம். இது மிகவும் சிறப்பாக செயல்பட்டது. டெல்லியில் யோகா வகுப்புகளை இவர்கள் மூடியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.  இன்று (நேற்று) காலை யோகா வகுப்புகள் நடக்கவில்லை. அற்ப அரசியலுக்காக மட்டுமே யோகா வகுப்புகள் மூடப்பட்டுள்ளதை நீங்கள் முதல் முறையாக பார்த்திருப்பீர்கள்.

பா.ஜ.க.

எங்களுக்கு பணம் வேண்டாம் ஆனால் நாங்கள் வகுப்புகள் நடத்த விரும்புகிறோம் என்று யோகா ஆசிரியர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. சிலர் நன்கொடை வழங்கவும் முன்வந்தனர். யோகா வகுப்புகள் மூடப்படாது என்பதை இன்று இங்கிருந்து அறிவிக்க விரும்புகிறேன். யோகா ஆசிரியர்களுக்கு நான் சம்பளம் வழங்குவேன். பஞ்சாபில் யோகா வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. குஜராத்தில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அங்கும் நாங்கள் யோகா வகுப்புகளை தொடங்குவோம். இந்த நாட்டு மக்களை தடுக்கும் அளவுக்கு தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்று அவர்கள் (பா.ஜ.க.) நினைக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நல்ல முயற்சிகளையும் நிறுத்துகிறார்கள். அவர்கள் தீபாவளி கொண்டாட்டங்களை நிறுத்தி விட்டனர். இப்போது மொஹல்லா கிளினிக்குகளை நிறுத்த போகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். டெண்டர்களை நிறுத்த போகிறார்கள். நான் அதை நடக்க விட மாட்டேன். டெல்லி மக்களை தொந்தரவு செய்ய நான் அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.