பா.ஜ.க.வின் கர்வத்தை உடைப்போம், எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.. குஜராத் மக்களிடம் கெஜ்ரிவால் வேண்டுகோள்
பா.ஜ.க.வின் கர்வத்தை உடைப்போம், எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என குஜராத் மக்களிடம் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் விரிவுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அண்மையில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றது ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை மனதில் வைத்து அங்கு ஆம் ஆத்மியை பலப்படுத்தும் நோக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார். குஜராத் மாநிலம் பருச்சில் நேற்று நடைபெற்ற ஆதிவாதி சங்கல்ப் மாகசம்மேலனில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: குஜராத் மாநிலத்தில் தனது கட்சி கவலைப்பட ஒன்றுமில்லை என்று பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் என்னிடம் தெரிவித்தார். குஜராத்தில் உள்ள 6.5 கோடி மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். பா.ஜ.க.வின் கர்வத்தை உடைப்போம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், உங்களுக்கு எங்கள் அரசாங்கம் பிடிக்கவில்லை என்றால் அடுத்த முறை என்னை வெளியேற்றுங்கள். நான் மிகவும் நேர்மையான மற்றும் ஊழலற்ற நபர். இவர்கள் (பா.ஜ.க.வினர் விசாரணை அமைப்புகள் வாயிலாக) என்னிடம் நிறைய விசாரணைகள் நடத்தி எதுவும் கிடைக்கவில்லை.
குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் வரும் என்று கேள்விபட்டேன். ஆம் ஆத்மி கட்சிக்கு நீங்கள் (பா.ஜ.க.) பயப்படுகிறீர்களா? எங்களுக்கு அவகாசம் கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. டிசம்பர் வரை நேரம் கிடைத்தால் நாங்கள் பெரும்பான்மை பெற்று விடுவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன், கடவுள் நம்முடன் இருக்கிறார். நீங்கள் (பா.ஜ.க.) இப்போது அல்லது 6 மாதங்களுக்கு பிறகு தேர்தல் நடத்தினாலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.