மேவானி கைது.. மோடியை பற்றி டிவிட் செய்யும்போது கவனமாக இருங்க என மற்றவர்களுக்கு ஒரு செய்தி.. பா.ஜ.க. எச்சரிக்கை

 
ஜிக்னேஷ் மேவானியை  அழைத்து செல்லும் போலீசார்

ஜிக்னேஷ் மேவானி கைது நடவடிக்கை, மோடியை பற்றி டிவிட் செய்யும்பொது கவனமாக இருக்க வேண்டும் என்று மற்றவர்களுக்கான ஒரு செய்தி என மேவானி மீது புகார் கொடுத்த பா.ஜ.க.வின் அருப் குமார் டே எச்சரித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் பிரபலமான தலித் தலைவராகவும், வட்கம் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாகவு இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. அண்மையில்   குஜராத்தில் பாலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்த ஜிக்னேஷ் மேவானியை நள்ளிரவில் அசாம் போலீசார் திடீரென அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அசாமில் பா.ஜ.க.வின் இளம் தலைவர்களில் ஒருவரும், போடாலாந்து டெரிடோரியல் கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருமான அருப் குமார் டே கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீசார் கைது செய்தனர். அருப் குமாா டே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் ஜிக்னேஷ் மேவானியின் ட்விட்களை நீண்ட நாட்களாக பின்தொடர்ந்து வருகிறேன். அவர் (மேவானி) பதவிகளால் மக்களை பிரிக்க முயற்சிக்கிறார். எப்போதும் பிரதமர் மோடியை பற்றி எதிர்மறையாக பேசுகிறார். 

அருப் குமாா டே

மோடி ஜி நம் பிரதமராக இருப்பது நம் அதிர்ஷ்டம். மேவானி அவரது பெயரை சமீபத்திய வன்முறைகளுடன் இணைக்க முயற்சிக்கிறார். அதற்கு (வன்முறைகளுக்கு) பிரதமர் மோடியா பொறுப்பு? கோட்சேவை பிரதமர் மோடியின் கடவுள் என்கிறார், அதற்கு அவரிடம் (மேவானி) என்ன ஆதாரம் உள்ளது?. நாங்கள் பா.ஜ.க. தொண்டர்கள், பிரதமர் மோடியை பற்றிய இது போன்ற தவறான மற்றும் சதி பதிவுகள் மற்றும் டிவிட்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். மேவானிக்கு எதிராக போலீஸ் புகார் மூலம், பிரதமர் மோடியை பற்றி டிவிட் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று மற்றவர்களுக்கு, குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறோம். எப்.ஐ.ஆர். பதிவு செய்தோம். 

பிரதமர் மோடி

மேவானி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தூண்டிவிட விரும்பியதால், கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டன. சமீபத்திய குஜராத் வன்முறைக்கு பிரதமரை குற்றம் சாட்டுவதாக அவர் டிவிட் இருந்தது. அமைதிக்காக வலியுறுத்துமாறு பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் முறையிடலாம், ஆனால் எந்த மாநிலத்திலும் நடந்த வன்முறைக்கு பிரதமரை குறை கூற முடியாது. எனது புகாருக்கும், அரசியலுக்கும் வரவிருக்கும் குஜராத் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேவானியை அசாம் காவல்துறை உடனடியாக கைது செய்தது, ஆற்றல்மிக்க முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் ஆட்சியின் கீழ் இங்குள்ள காவல்துறை மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவதை காட்டுகிறது. எனவே எந்த டிவிட்டிலும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சாத்தியம் இருந்தால், நாங்கள் இந்த வழியில் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.