திராவிடர் கழகத்தினர் வில்லன்களா? பதான் சர்ச்சையில் துரை வைகோ கேள்வி
நீச்சல் உடையில் ஷாருக்கானுடன் பதான் படத்தில் நடித்திருக்கும் தீபிகா படுகோனின் ஆடை காவி நிறத்தில் இருப்பதால் கடும் சர்ச்சை எழுந்திருக்கிறது.
இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டார்கள் என்று கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
காவி உடை வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டிருக்கிறது. அந்த பாடல் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் இல்லையென்றால் பதான் படத்தை மத்திய பிரதேசத்தில் திரையிட அனுமதி வழங்குவதா வேண்டாமா என்று யோசிப்போம் என எச்சரித்திருக்கிறார் மத்திய பிரேத உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா.
ஷாருக்கான், தீபிகா கொடும்பவியை எரித்து உள்ளார்கள் வீரசிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள். வலைத்தளங்களில் பாஜகவினர் தொடர்ந்து கண்டனங்களை பதிவிட்டு வருகின்றார்கள். இதற்கு பதில் அளித்திருக்கும் ஷாருக்கான், சமூக வலைத்தளங்கள் பிற்போக்குத்தனமாக இயங்குகின்றன. மோசமான கருத்துக்களை வெளியிடுகிறார்கள். ஆனாலும் நான் நேர்மறையாக இருப்பேன். எனக்கு எதிராக வரும் கருத்துகள் என்னை பாதிப்பதில்லை எனக் கூறியிருக்கிறார்.
காவி உடை அணிந்து கொண்டு வெறுப்பு பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு சாமியார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்கிறார் . பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்கிறார்கள் . இதெல்லாம் தவறு இல்லையா? ஆனால் ஒரு படத்தில் நடிகை காவி கலர் உடை அணிந்தால் மட்டும் தவறா என்று கேட்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
இந்நிலையில் மதிமுக செயலாளர் துரை வைகோவிடம் இது குறித்து கேள்வி எழுப்ப அதற்கு அவர் அளித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் மாமனிதன் என்கிற ஆவணப்படம் சென்னையில் மினி உதயம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்நிகழ்விற்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ,அமைச்சர் மா. சுப்பிரமணியன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர் .
இந்த படம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசினார் துரை வைகோ. அப்போது அவரிடம், பதான் பாடல் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பிய போது, காவி என்பது ஒரு கலர். அதை ஒரு இயக்கம் சொந்தம் கொண்டாடுவது தவறு. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று சில மாநிலங்களில் சொல்லி வருகிறார்கள். நிறைய திரைப்படங்களில் கருப்பு ஆடைகள் அணிந்து வில்லனாக நடிக்கிறார்கள் . அப்படி என்றால் திராவிடர் கழகத்தினர் வில்லன்களா? சினிமா துறையை பொறுத்த வரைக்கும் சுதந்திரமாக அவர்கள் படம் எடுக்க வேண்டும். குறுகிய கண்ணோட்டத்துடன் செயல்பட்டு தடை செய்ய சொல்வது ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளார்